Home One Line P2 கொவிட் தடுப்பூசி : முதல் கட்டமாக இந்தியா முழுக்க 30 மில்லியன் – தமிழகத்தில் மட்டும்...

கொவிட் தடுப்பூசி : முதல் கட்டமாக இந்தியா முழுக்க 30 மில்லியன் – தமிழகத்தில் மட்டும் 6 லட்சம்

539
0
SHARE
Ad

புதுடில்லி : உலக அளவில் மிகப் பெரிய கொவிட்-19 தடுப்பூசி போடும் நாடாக இந்தியா திகழ்கிறது. மற்ற நாடுகள்  வெளிநாடுகளில் இருந்து மருந்துகளைத் தருவித்து விநியோகிக்கும் நிலையில் இந்தியாவோ சொந்தமாகவே  தடுப்பூசிகளை தனது ஆய்வுக் கூடங்களில் கூட்டாகத் தயாரித்து விநியோகிக்கவிருக்கிறது.

உள்நாட்டின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரித்த தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருக்கின்றன.

எதிர்வரும் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன.

#TamilSchoolmychoice

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 600,000 பேருக்கு முதல் கட்டமாக கொவிட் தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கான செலவினங்களை இந்திய அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் இரண்டு முதல் மூன்று வாரத்துக்குள் முடிவடையும்.

2,618 பெரிய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு குளிர்சாதன வசதியுடன் எடுத்துச்செல்லப்படவிருக்கின்றன.

ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் 226 இடங்களில் தடுப்பூசி போடும் ஒத்திகை வெற்றிக்கரமாக நடந்தேறியிருக்கிறது.

தடுப்பூசி போடும் பணி மதுரை அல்லது சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு இயங்கலை வழி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.