கோலாலம்பூர் : தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடைபெறும் இரத ஊர்வலத்திற்கு இறுதியாக இந்த ஆண்டும் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27-ஆம் தேதி தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரதம் புறப்பட்டு ஊர்வலமாக சென்று பத்துமலையிலிருந்து ஜனவரி 29-ஆம் தேதி மீண்டும் மாரியம்மன் ஆலயத்திற்குத் திரும்பும்.
இந்த முடிவை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இரத ஊர்வலத்திற்கு தேசியப் பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் அனுவார் மூசா தெரிவித்தார்.
எனினும் இரதம் புறப்பட்ட பின்னர் எங்கேயும் நிற்பதற்கு அனுமதி வழங்கப்படாது.
10 பக்தர்களுக்கும் மேற்பட்டவர்கள் இரதத்துடன் உடன் செல்ல அனுமதியில்லை.
வழியெங்கும் இசை முழக்கங்கள் எதற்கும் அனுமதி இல்லை.
கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் கொவிட்-19 நிபந்தனைகள், வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வர் என்றும் அனுவார் மூசா கூறினார்.
தைப்பூசம் ஜனவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.