சென்னை: சசிகலா இன்று திங்கட்கிழமை பெங்களூரிலிருந்து சென்னைத் திரும்பியுள்ளார். அவருக்கு அதிமுக கொடியைப் பயன்படுத்தும் அனுமதியை காவல் துறை மறுத்துள்ளது. ஆயினும், காவல் துறை விதித்த தடையை மீறி அதிமுக கொடி பொருந்திய காரில் சசிகலா பெங்களூருவில் புறப்பட்டார்.
அவருக்கு மீண்டும் எச்சசிக்கை வழங்கப்போவதாக தெரிவித்த காவல்துறை, அதிமுக கொடியுடன் வந்தால் நடவடிக்கை உறுதி எனவும் எச்சரித்தது.
இந்நிலையில், தற்போது தமிழக எல்லைக்குள் சசிகலா நுழைந்துள்ள சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள், ஆரத்தி எடுத்து, மலர்தூவி, பால்குடம் எடுத்து வரவேற்பளித்தனர். அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.
தமிழக எல்லையான ஜூஜுவாடிக்கு வந்தபோது காரை மாற்றி, வேறு காரில் சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா. மாற்றப்பட்ட புதிய காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
ஓசூர் அத்திப்பளியில் சசிகலாவுக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். ஏராளமான தொண்டர்கள் சசிகலாவுக்கு பூச்செண்டுகளை கொடுத்தும் வரவேற்றனர்.
இதனிடையே, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவாகி வருகின்றன.