கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மக்கள் எழுப்பிய குறைகளையும் பிரச்சனைகளையும் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி கூட முடியாத நிலையை அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில், கொவிட் -19 தொற்றுநோயின் விளைவாக, மக்கள் பொருளாதார நெருக்கடியால் சோர்வடைந்துள்ளனர். மேலும், அவர்கள் தொற்றுநோயை தடுப்பதில் கவனமுடன் இயங்கிறார்கள் என்றும், குடும்பங்களுக்கு உணவு வழங்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் தொடரவும் வருமானம் தேவை என்றும் சாஹிட் கூறினார்.
“நான் அரசாங்கத்தில் இருக்கிறேன். ஆனால், நாடாளுமன்றம் கூடவில்லை என்பதால், மக்களின் குரல் தடுக்கப்பட்டுள்ளது. எனது குரல் மக்களின் பிரதிபலிப்பு. மேலும், பல நண்பர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள், ஏனென்றால் மக்களின் எண்ணங்களுக்கு குரல் கொடுப்பவர்கள் நாங்கள். நாங்கள் இதனைச் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வது?,” என்று அவர் வினவியுள்ளார்.
“நாடாளுமன்றத்தில் அமர வேண்டிய பிரதிநிதிகள் மக்களின் குரல்களையும் எண்ணங்களையும் எழுப்புகிறார்கள். ஜனநாயகம் தடுக்கப்பட்டிருக்கும்போது, மக்களின் குரலும் தடுக்கப்பட வேண்டுமா?” என்று சாஹிட் கேள்வி எழுப்பியுள்ளார்.