கோலாலம்பூர் : நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான பெர்ஜெயா கொர்ப்பரேஷன் பெர்ஹாட் தனது தலைமைச் செயல் அதிகாரியாக அப்துல் ஜலீல் அப்துல் ரஷீட்டை (படம்) நியமித்துள்ளது.
அப்துல் ஜலீல் இதற்கு முன்னர் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் என்ற தேசிய முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றியவர்.
பெர்ஜெயா குழுமம் டான்ஸ்ரீ வின்சென்ட் டானின் மிகப் பெரிய வணிகக் குழுமம் ஆகும். இதற்கு முன்னர் பெர்ஜெயா குழுமம் வின்சென்ட் குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. இப்போதுதான் அந்தக் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்ட ஒருவர் அதன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
38 வயதான அப்துல் ஜலீல் தேசிய முதலீட்டு நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்களில் முக்கியப் பதவிகள் வகித்து அனுபவம் பெற்றவாராவார்.
புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பை வின்சென்ட் டானின் மகன் டத்தோஸ்ரீ ரோபின் டான் யியோங் சிங்கிடமிருந்து அப்துல் ஜலீல் பெற்றுக் கொள்வார். பெர்ஜெயா கோர்ப் நிறுவனத்தின் நிருவாகத் துணைத் தலைவர் பதவியை ரோபின் டான் இனி வகித்து வருவார்.