கோலாலம்பூர்: தனது சொத்துகளில் பாதியை தொண்டுக்காக வழங்குவதாக பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் வின்சென்ட் டான் தெரிவித்தார்.
அவர் இல்லாதபோது, இது செயல்படுத்தப்படும் என்றும், 70 வயதைத் தாண்டிய செல்வந்தர்களும் இதைச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
வீட்டுவசதி என்பது மனிதர்களின் அடிப்படைத் தேவையாகவும், ஒரு நபரின் கௌரவம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இன்றியமையாததாகவும் இருப்பதால், அவ்வாறு செய்வது மலிவு வீடுகளைக் கட்ட உதவும் என்றும் அவர் கூறினார்.
“மலேசியர்களின் ஆதரவு மற்றும் அரசாங்கத்தின் சலுகைகள், உரிமங்கள் மற்றும் எங்கள் வாழ்நாளில் நாங்கள் சந்தித்த பலரின் பிற உதவிகளால் எங்களின் பொருள் செல்வம் சாத்தியமாகும்போது, சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்திற்கு விட்டுச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் டி ஸ்டாரிடம் கூறினார்.
“மலேசியர்களுக்கு மலிவு விலையில் வீடுகளை கட்டுவதிலும் நான் ஆர்வமாக உள்ளேன். 900 சதுர அடியில் ஐந்து படுக்கையறைகள் கொண்ட நான்கு குளியலறை / கழிப்பறை மற்றும் 750 சதுர அடியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட மூன்று குளியலறை / கழிப்பறை ஆகியவற்றை பெர்ஜெயா வெற்றிகரமாக வடிவமைத்துக் கட்டியுள்ளது.
“மலேசியாவின் பல்வேறு நகரங்களில் 900 சதுர அடி குடியிருப்பில் மலிவு விலையில் 250,000 ரிங்கிட் மற்றும் 300,000 ரிங்கிட் விலையில் மலிவு வீடுகளை விற்க தனியார் துறை தயாராக இருக்க வேண்டும். எனது செல்வத்தில் பாதியை நான் மக்களுக்கும் நாட்டிற்கும் திருப்பித் தருவது மட்டுமே சரியானது. இது சரியான செயல், ” என்று அவர் கூறினார்.