கோலாலம்பூர்: பிரதமர் பதவி அம்னோ மற்றும் தேசிய முன்னணிக்கு சொந்தமானது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் வலியுறுத்தினார்.
அம்னோ பொதுக் கூட்டத்தில் தனது முக்கிய உரைக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அம்னோ முன்னணியில் இருக்க வேண்டும் என்றும், பின்னணியில் இருக்க முடியாது என்றும் கூறினார்.
“பிரதமர் பதவி அம்னோ, தேசிய முன்னணிக்கு. வேறு வழியில்லை. அம்னோ மலாய்க்காரர்கள் மட்டுமல்ல, எல்லா இனங்களையும் கவனித்துக்கொள்ளும், ” என்று அவர் கூறினார்.
60 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்தி வரும் அம்னோ எந்தவொரு கட்சியின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி பழக்கமில்லை என்று அவர் கூறினார்.
“அம்னோ மற்றும் தேசிய முன்னணி 60 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்தி வருகின்றன, எங்களுக்கு ஒரு நல்ல பதிவு உள்ளது. அம்னோ முதன்மைக் கட்சியாகவும், நாட்டின் நிர்வாகத்தின் மையமாகவும் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பிரதமராக நியமிக்க தேசிய முன்னணியில் சிறந்த வேட்பாளர் யார் என்று கேட்டபோது, அவர் நகைச்சுவையாக தாம்தான் மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று கூறினார்.
“நான் விளையாட்டுக்காகக் கூறினேன். கட்சி இந்த முடிவை எடுக்கும். நாங்கள் வழக்கமான வழிமுறைகளுக்கு கட்டுப்படக்கூடாது, ஆனால் அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.