
ஷா ஆலாம் : கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் தனக்கு எதிராக அவதூறான கருத்துகளைக் கூறியதற்காக அவதூறு வழக்கு தொடுத்துள்ள பிரபல வணிகர் வின்சென்ட் டான், தொடர்ந்து அத்தகைய கருத்துகளை சனுசி தெரிவிக்கக் கூடாது என ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார்.
முன்பு தொடுத்த அவதூறு வழக்கு முடிவடையும் வரையில் சனுசி முகமட் நூர் தனக்கு எதிரான கருத்துகளை கூறக் கூடாது என்பதே அந்தத் தடையுத்தரவின் சாரம்சமாகும்.

கிள்ளான் ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரிக்கும் வின்சென்ட் டான்னுக்கும் இடையில் முறைகேடான அம்சங்கள் நிலவியதாக சனுசி முகமட் நூர் கூறியதைத் தொடர்ந்து வின்சென்ட் டான் அவருக்கு எதிராக அவதூறு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கெடா, ஜித்ராவில் உரை நிகழ்த்திய சனுசி முகமட் நூர் அவதூறுகள் அடங்கிய அந்த உரையை நிகழ்த்தினார் என்ற அடிப்படையில் வின்சென்ட் டான் வழக்கு தொடுத்துள்ளார்.