Home நாடு தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டிப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்வேன் – மஇகா கல்விக்...

தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டிப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்வேன் – மஇகா கல்விக் குழுத் தலைவர் செனட்டர் நெல்சன் வாக்குறுதி

522
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆரம்பப் பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தற்போது தமிழ்ப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கான வழிகாட்டி பயிற்சிப் புத்தகங்களின் அவசியத்தை தான் உணர்ந்திருப்பதாகவும் அந்தப் புத்தகங்கள் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் மஇகா தேசிய கல்விக் குழுத் தலைவரும் செனட்டருமான டத்தோ நெல்சன் ரங்கநாதன் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 5-ஆம் தேதி பத்துமலைத் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது டத்தோ நெல்சன் இந்த வாக்குறுதியை வழங்கினார்.

இதே நிகழ்ச்சியில் முன்னதாகப் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் மொழிப் பிரிவுக்கான துணை இயக்குநருமான வீ.செங்குட்டுவன், சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டிப் பயிற்சிப் புத்தகத்தை உருவாக்கியிருப்பதாகவும், சிலாங்கூர் மாநிலத்திற்கு மட்டும் என்றில்லாமல் நாடு முழுமையிலுள்ள எல்லா தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும் – அதனால் மாணவர்களும் பயனடைய வேண்டும் – என விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தப் புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவுகள்தான் இந்த முயற்சியை தொடர்வதற்கு தங்களுக்குத் தடையாக இருப்பதாகவும் செங்குட்டுவன் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நெல்சன், பயனான இந்தப் புத்தகத்தை தேவைப்படும் எண்ணிக்கையில் அச்சடித்து வழங்குவதற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி கூறினார்.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 தமிழாசிரியர்கள் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

செங்குட்டுவன் உரையாற்றுகிறார்