வாஷிங்டன் : உலக அளவில் குறுகிய நேர காணொலி செயலியாக புகழ்பெற்றிருப்பது டிக் டாக். எனினும் சீன நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்டிருப்பதால் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டது.
இந்தியா தடை செய்த பல சீன செயலிகளில் டிக்டாக் செயலியும் ஒன்று. டிக்டாக் செயலிக்கான வரவேற்பைக் கண்டு தற்போது கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளமும் சொந்தமாக ஒரு குறுநேர காணொலிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
“ஷார்ட்ஸ்” (Shorts) என்பது இதன் பெயர். இன்று வியாழக்கிழமை மார்ச் 18 முதல் இந்தக் குறுஞ்செயலி அமெரிக்காவில் அறிமுகம் கண்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்தியாவிலும் இந்த செயலியை யூடியூப் முன்னோட்ட முறையில் அறிமுகப்படுத்தியது.
உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் இந்தப் புதிய ஷார்ட்ஸ் குறுநேரக் காணொலிகளைப் பார்க்க முடியும். ஆனால் உருவாக்க முடியாது.
திறன்பேசிகளின் (ஸ்மார்ட்போன்) வழி உருவாக்கப்படும் காணொலிகளை பயனர்கள் ஷார்ட்ஸ் தளத்தில் பதிவேற்ற முடியும். டிக் டாக் தளத்தில் உள்ள அதே வசதிகளை ஷார்ட்ஸ் தளமும் கொண்டிருக்கும்.