‘மகா சித்தர் போகர்’
இணையதளத் தொடரை
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்
தொடக்கி வைக்கிறார்
தண்டபாணி ஆசிரம அறக்கட்டளை, சித்தர் மகன் சீனிவாசன் தயாரிப்பில் ‘மகா சித்தர் போகர்’ எனும் இணையதளத் தொடர் ஐந்து பாகங்களாக வரவிருக்கிறது. தற்போது இதன் முதல் பாகத்தை ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை 4. 45 (இந்திய நேரம்), மலேசிய நேரம் இரவு 7.15 மணியளவில் பழனி மலை முருகன் அருளால் டத்தோஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைப்பார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.காவின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ‘தீம் வியூவர்’ TEAM VIEWER) மூலமாக தனது இல்லத்திலிருந்து “போகர்” இணையதளத் தொடரின் முதல் பாகத்தை வெளியிடுவார்.
இந்தத் தொடரின் தயாரிப்பாளர் சித்தர் மகன் சீனிவாசன், இணைத் தயாரிப்பாளர் குரு கண்ணன், இயக்குனர் சத்யராஜ், ஒளிப்பதிவாளர் சிவகுமார் ரங்கசாமி, நடிகர்கள் திரு சத்திய சிவக்குமார், மேகா ஸ்ரீ, பாவலர் வையவன், சிறுவயது போகராக நடித்த சிவசமர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் சரவணன் தெரிவித்துக் கொண்டார்.
இதுவரை யாரும் போகரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவில்லை. இந்த அரிய முயற்சியைக் கையில் எடுத்து, இன்று உலக மக்கள் எளிதாகப் பார்க்கும் வகையில் ‘யூ தியூப்’ தளத்தில் வெளியிடும் படக்குழுவினருக்கு தனது நன்றியையும் பதிவு செய்தார் சரவணன்.
5 பாகங்களைக் கொண்ட மகா சித்தர் போகரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு இணையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. போகர் தனது வாழ்க்கையைத் தமிழ் நாட்டில் தொடங்கி, சீனாவில் கால் பதித்து மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்தார் என்பது வரலாறு கூறும் உண்மை. அதைத் திரையில் கொண்டு வருவது கடினம் என்றாலும், அடுத்தத் தலைமுறைக்கு இது பதிவாக வேண்டும் எனும் உன்னத நோக்கில் இது படமாக்கப்பட்டதாக அதன் தயாரிப்பாளர் சித்தர் மகன் சீனிவாசன் தெரிவித்தார்.
சிறப்பு வாய்ந்த 18 சித்தர்களில், போகர் குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக பழனி முருகனின் மூலத் திருவுருவச் சிலையை ஒன்பது நவபாஷாணங்களைக் கொண்டு உருவாக்கிய சித்தர் போகர் ஆவார். அந்த சிலையின் தன்மையையும், நன்மையையும் இன்றும் உலகில் வாழும் இந்துக்கள் போற்றி வருகின்றனர்.
இது போன்ற அரிய விஷயங்களை இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். நமது சமயத்தின் நன்மைகளையும், வாழ்வியல் உண்மைகளையும் உள்ளடக்கிய இது போன்ற தயாரிப்புகளை வெற்றியடையச் செய்வோம் எனவும் சரவணன் தெரிவித்தார்.
இன்று ஆகஸ்ட் 30, புதன்கிழமை, இரவு 7.15 தொடங்கி, ‘Sithar Magan Srinivasan’ எனும் youtube முகவரியில் போகர் தொடரின் தொடக்க விழா நிகழ்ச்சியைப் பார்த்து மகிழலாம்.
இறந்தவரை வாழவைத்தார், நீண்ட காலம் வாழும் வித்தையைக் கற்றுத் தந்தார், இரும்பைத் தங்கமாக்கினார் இப்படி இன்னும் நூற்றுக்கணக்கான அதிசயங்களை வாழ்க்கையில் கொண்டவர் போகர். ஒரு முனிவராக, தத்துவ ஞானியாக, சித்த வைத்தியராக, சமய போதகராக வாழ்ந்த மாமுனிவர் போகரின் வரலாற்றை அறிந்து கொள்வோம்.