நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டுவதற்கும், அவர்களுக்கு நெருக்கடி தருவதற்கும் ஊழல் தடுப்பு ஆணையமும் காவல் துறையும் பயன்படுத்தப்படுவதாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
அன்வாரும், அரசியல் ஆயுதமாக ஊழல் தடுப்பு ஆணையம் பயன்படுத்தப்படக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் தொடர்பில் அசாம் பாக்கியைத் தான் சந்திக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
தன்னைச் சந்திக்க ஒப்புக்கொண்டிருப்பதற்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அன்வார் இப்ராகிம் தனது நன்றியையும் தெரிவித்தார்.
“ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும், அதிகார விதிமீறல்களையும் நான் கடுமையாகக் கருதுகிறேன். இந்த விவகாரங்களில் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் தேவை” எனவும் அன்வார் குறிப்பிட்டிருக்கிறார்.
அண்மையில் பிகேஆர் கட்சியிலிருந்து விலகிய சேவியர் ஜெயகுமார் மீதான ஊழல் புகார்களின் விசாரணைகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாகத்தான் அவர் கட்சி மாறினார் என பல தரப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
தற்போது சேவியர் மீதான ஊழல் புகார்களின் விசாரணை முடிவுகள் என்ன என்பது அறிவிக்கப்பட வேண்டுமெனவும் அந்தத் தரப்புகள் அறைகூவல்கள் விடுத்து வருகின்றன.