கோலாலம்பூர்:காவல் துறையில் தவறான இயக்கங்கள் மற்றும் ஊழல் விவகரங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு முடா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில், தம்மை வீழ்த்த வீழ்த்த விரும்பும் இளம் அதிகாரிகள் இருப்பதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் கூறியிருந்தார்.
“முன்னாள் தேசிய காவல் துறைத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் உட்பட காவல் துறை சம்பந்தப்பட்ட தவறான இயக்கங்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று முடா கட்சி கேட்டுக் கொள்கிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் மலேசிய சமூகத்தின் பொதுப் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும்,” என்று முடா ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) தெரிவித்தது.
இது வெளிப்படையாகவும், நியாயமாகவும் விசாரிக்க காவல் படை, விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) அமைக்க வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது. இந்த விவகாரமாக முடா இன்று பிற்பகல் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் மனு ஒன்றை வழங்கியது.
அண்மையில், காவல் துறையில் பணியாற்றும் இளம் காவல் துறை அதிகாரிகள் சிலர் தங்களது தவறான நடவடிக்கைகளை மறைப்பதற்கும், ஈடுபடுவதற்கும், தம்மை வீழ்த்த முயற்சிகள் செய்வதாக ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.
அவர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அப்துல் ஹாமிட், இவர்களை, காலம் தாழ்த்தாது விரைவில் நேர்வழிக்கு திரும்புமாறு அறிவுறுத்தினார்.
தவறான செயல்களை செய்ய அனுமதிக்க காவல் துறையை கட்டுப்படுத்த ஓர் இயக்கம் இருப்பதாக ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இந்த விஷயத்தால் தான் குறிவைக்கப்பட்டதாகவும், அவருக்கு எதிராக சதி செய்தவர்கள் மனந்திருந்துவார்கள் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்.
“நான் அவர்களை மனம் திருந்தும்படி கேட்கிறேன். உங்களுக்கு 60 வயதாக இருக்கும்போது, உங்கள் நீல நிற சீருடையை அணியமாட்டீர்கள். யாரும் உங்களைக் கண்டு பயப்பட மாட்டார்கள். அந்நேரத்தில், நீங்கள் வருத்தப்படுவீர்கள்,” என்று அவர் கூறினார்.