Home One Line P1 “மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி...

“மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி 1)

1863
0
SHARE
Ad
முரசு நெடுமாறன்

(மலேசியாவின் மூத்த கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன். தமிழ் கற்பித்தல், மலேசியத் தமிழ் இலக்கியம், தமிழ்க் கல்வி குறித்து பல கோணங்களில் ஆராய்ச்சிபூர்வமாக கட்டுரைகளும் நூல்களும் படைத்தவர். “மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையில் தனது கருத்துகளையும், வாதங்களையும் முன்வைக்கிறார்   முரசு நெடுமாறன்)

முன்னுரை 

மலேசியாவின் இரு நூற்றாண்டு காலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் கலைத்திட்டம், தமிழ்ப்பாடநூல்கள், அண்மையபாடநூல் (2015) ஒன்றனில் அடங்கியுள்ள ஒரு கட்டுரை, அதனில் இடம்பெற்றுள்ள தகவல், தமிழாசிரியர் பணி – தொண்டு குறித்தும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள வீண்பழிகள் பற்றியும் ஆராய்ந்து உண்மை காணும் நோக்கில் இக் கட்டுரை எழுதப் பெறுகிறது. இதன் கருப்பொருள் மிக விரிந்ததாகும். எனினும் அளவைக் கருத்தில் கொண்டு ஒரு பறவைப் பார்வையாய்ச் சுருக்கமாக நோக்கப்பெறுகிறது. இப்பொழுது எழுந்துள்ள விவாதங்களை நீட்டும் எண்ணத்தில் இஃது எழுதப் பெறவில்லை. அறைகூவல் – சவால் விடலும் இல்லை. ஐயங்கள், விவாதங்கள் நீங்கி அமைதி மலரவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

பாடநூல்

பள்ளிப் பாடநூல் என்பது எதிர்காலத் தலைமுறையை எல்லாம் வல்ல வலிமைமிக்கதாக ஆக்கும் நோக்கோடு, கல்வியமைச்சு வகுத்த கலைத் திட்டத்தையொட்டி எழுதப்பெறுவதாகும்.

#TamilSchoolmychoice

ஒரு பாடநூல் என்பது, பல படிநிலைகளைக் கடந்து, உருப்பெற்று வெளிவருவதாகும். ஒவ்வொரு பாடநூல் உருவாக்கத்திற்கும் உயரிய நோக்கமுண்டு. பாடநூல்ஆசிரியர் நினைத்தவற்றையெல்லாம் எழுதிடமுடியாது; கண்டவற்றையெல்லாம் உட்புகுத்திட இயலாது. நாட்டுநெறி (Rukun Negara), கல்வி மெய்யியல் – தத்துவம் (Falsafa Pendidikan) போன்றவற்றுக்கு மாறுபடா வண்ணம், கற்கும் மாணவர் அகவை, வாழும் சூழல், மொழித் திறன், உள்வாங்கும் ஆற்றல் போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பொறுப்புடன் உருவாக்கப்பெறுவது.

பாடநூலானது, மாணவர் கற்கவேண்டிய  அனைத்தையும் உள்ளடக்கியதன்று. அதனைத் துணையாய்க்கொண்டு ஆசிரியர்கள் உருவாக்கிக் கற்பிக்கும் உயிர்ப்புமிக்க பாடங்களே – அவற்றைப் படைக்கும் ஈர்ப்புத் தன்மைமிக்க உத்திகளே மாணவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தும்.  பாடநூலை, கற்கவேண்டிய அனைத்தும்கொண்ட களஞ்சியமாகக்கொண்டு, வேறு எதனையும் நாடாமல் செயல்படுவது அடிமைத்தன்மை கொண்டசெயல் என்பர் தேர்ந்த கல்வியாளர்.

தமிழகப் பாடநூல்கள்

மலேசியாவில் தொடக்க காலத்தில் தமிழ்க் கல்விக்கு வரையறுக்கப்பட்ட கலைத் திட்டம் (Syllabus) இல்லை. எழுத, படிக்க, சிறுசிறு கடிதங்கள் எழுதக் கற்றிருந்தால் போதுமென்பதே அப்போதைய நோக்கம். தன்னார்வம் மிக்க, தொண்டுமனங் கொண்ட தமிழ்க் கல்விமான்கள், மாணவர் நலங்கருதித் தன்னார்வ முயற்சியில் கலைத்திட்டம் வகுத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கு உயிரூட்டி வந்தனர்.

யான் கீழ்த்தொடக்கப் பள்ளியிலும் மேல்நிலை வகுப்பான ஏழாம்வகுப்புப் படித்தகாலத்திலும் (1952,53) தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, நிலநூல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும் தமிழ்நாட்டுப் பாடநூல்களே பயன்படுத்தப்பட்டன; இலங்கை நாட்டுப் பாடநூல்களும் இங்குப் பள்ளிகளின் பயன்பாட்டில் இருந்தன. பிற்காலத்தில் இங்கும் பாடநூல் உருவாயின எனினும், தமிழுக்கு அதிகார முறையிலான கலைத்திட்டம் அப்போதில்லை.

முறையான கலைத்திட்டம்

மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு முறையான புதிய கலைத்திட்டம் (KBSR) 1983ஆம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வந்தது. அது தமிழார்வமிகு நன்னெஞ்சரால் உருவாக்கப்பட்ட திறன் அடிப்படையிலான கலை – பாடத்திட்டம். அத் திட்டம் உருவான பின்னர்தான் இங்குப் பொருத்தமான தமிழ்ப் பாடநூல்கள் உருவாகத் தொடங்கின. தமிழுக்கு மட்டுமல்லாமல் நன்னெறிக்கல்வி, இசைக்கல்வி போன்ற பாடங்களுக்கும் பாடநூல்கள் உருவாயின.

யான் முறையாக ஆய்வுநெறிகற்ற ஓர் ஆய்வாளன் என்னும் முறையிலும் நூல்களைத் தேடித்தேடிப் படிக்கும் ஆர்வலன் என்னும் வகையிலும் மாநாடுகளில், கருத்தரங்குகளில், பயிலரங்குகளில் கட்டுரைபடைக்க இடையிடையே ஆய்வில் ஈடுபடுவதுண்டு. என் ஆய்வுப்பொருள் – கருதுகோள் பெரும்பாலும் கற்றல் கற்பித்தல் தொடர்புள்ளதாக அமையும். அதனால் நிரம்பப் பாடநூல்களைப் படித்த பட்டறிவு – அனுபவம் எனக்குண்டு.

இவை ஒருபுறமிருக்க, மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் எனக்கு நிரம்பத் தொடர்புண்டு. யான் தொடக்கப்பள்ளி ஆசிரியனாய்ப் பணியாற்றியவன் என்பதோடு, இடைநிலைப் பள்ளிகளில், புத்ரா பல்கலைக் கழகத்திலும் தமிழ் கற்பித்தவன்; ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலரங்குகள் நடத்தியவன். அரசு பள்ளி ஆசிரியன் என்னும் நிலையைத்தாண்டிக் கால் நூற்றாண்டுக்குமேல் 3,5,6ஆம் படிவத் தேர்வெழுதிய மாணவர்களுக்குப் பத்திற்கு மேற்பட்ட தொண்டுமன ஆசிரியர்களின் துணையோடு இலவய வகுப்புகளும், தேர்வு வழிகாட்டிப் பயிலரங்குகளும் நடத்தியவன்.

2016ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்க வாயிலாய் பிரதமர் துறையின் ‘சிடேக்’ அமைப்பின் நல்கையில் நாடுதழுவிய அளவில் பத்து இடங்களில் ஆயிரம் தமிழ் ஆசிரியர்களுக்குக் (100 மணிநேரம்) கவிதைப் பயிலரங்குகள் நடத்தியுள்ளேன். அவற்றிற்குரிய பாடங்கள் உருவாக்க நிரம்பப் படநூல்களைப் படித்துக் குறிப்பெடுத்துப் பயன்படுத்தியுள்ளேன்.

இவற்றையெல்லாம் இங்கு ஏன் சொல்கிறேனென்றால், தமிழ்ப்பள்ளிப் பாடநூல்கள் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் ஆசிரியர்கள் நிலை, அவர்கள் தொண்டு பற்றியும் கூற  நிறைவான பட்டறிவு – அனுபவம் எனக்குண்டு என்பதனை உறுதிப்படுத்தவேயன்றி, பரப்பிய – விளம்பர நோக்கம் கொண்டதன்று.

என்னிடம் கற்ற மிகப்பலர், பள்ளிகளில் கல்வித்துறைகளில் பணியாற்றினர்; இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்; அகச்சான்றாய் – வாழும்சான்றாய் மிளிர்கின்றனர். இக் கட்டுரையிலுள்ள எவையும் மிகையானவையோ வெற்றுத்தன்மை கொண்டவையோ அல்ல என்பதற்கு மேற்கண்ட செய்திகள் சான்றாகும்.

இறைமறுப்புத் தலைகாட்டியதில்லை

இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில், என்றும் இல்லாத பெரும்பழி ஒன்று, இன்று தமிழாசிரியர்கள்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.

“பள்ளிகளில் குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமயப் புறக்கணிப்பும் திராவிடக் கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்படுகிறது; கல்வியாளர்கள்மேல் வீண்பழியும் சுமத்தப்பட்டிருக்கிறது; மருட்டலும் விடப்பட்டிருக்கிறது.

திராவிடம் என்பது பல பொருள் கொண்ட ஒரு சொல். 1941இல் திராவிடர் கழகம் பெரியாரால் உருவானது. அதற்கொரு சித்தாந்தம் உண்டு. இறைமறுப்பு அதன் கூறுகளில் ஒன்றன்று. இது குறித்து இங்குத் தக்கார் சிலரும் விளக்கி உள்ளனர்.

அரை நூற்றாண்டிற்குமேல் – இன்றுவரையிலும் கல்வித் தொண்டிலிருந்து விடுபடாத யான் அறிந்தவரை, தமிழாசிரியர் எவரும் தங்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் இறைமறுப்பு – நாத்திக சிந்தனைகளைப் பரப்பியதில்லை; தங்கள் சொந்தக் கருத்துகளைத் திணித்ததில்லை. பொது, அறநூல்கள் எவற்றிலும் இறைமறுப்புக் கருத்துகள் இடம் பெற்றதில்லை.

இலக்கியம் என்னும் முறையில் மொழித்திறன்பெறத் தேவார, திருவாசகப் பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருமுறைப் போட்டிகளுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும்பொழுது, ஆசிரியர்கள் வேறுசமய மாணவர்களை அதனில் ஈடுபடுத்துவதில்லை; சமயப் புறக்கணிப்பும் பள்ளிகளில் நடந்ததில்லை; கலைத்திட்டத்தில் அதற்கு இடமுமில்லை. அதிகார முறையில் இசுலாம் அல்லாத மாணவர்களுக்கு நன்னறிக் கல்வி மட்டுமே கற்பிக்க முடியும்.

அடுத்து:

“மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி 2) திராவிடம் – ஒரு விளக்கம்…