Home One Line P2 தமிழ்நாடு நட்சத்திரத் தொகுதிகள் (1) – போடிநாயக்கனூர் : பன்னீர் செல்வத்தை வீழ்த்துவாரா தங்கத் தமிழ்ச்...

தமிழ்நாடு நட்சத்திரத் தொகுதிகள் (1) – போடிநாயக்கனூர் : பன்னீர் செல்வத்தை வீழ்த்துவாரா தங்கத் தமிழ்ச் செல்வன்?

1118
0
SHARE
Ad

Selliyal Video | Tamil Nadu Star constituencies- Bodinayakkanur | Will Thanga Tamil Selvan defeat O.Panneer Selvam? | 23 March 2021 | செல்லியல் காணொலி | தமிழ் நாடு நட்சத்திரத் தொகுதிகள் – போடிநாயக்கனூர் |பன்னீர் செல்வத்தை வீழ்த்துவாரா தங்கத் தமிழ்ச் செல்வன்? | 23 மார்ச் 2021

மார்ச் 23-ஆம் தேதி செல்லியல் யூடியூப் காணொலி தளத்தில் இடம் பெற்ற மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம் :

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் எதிரும் புதிருமாக பலமான வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளை வரிசையாகப் பார்ப்போம்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் முதல் நட்சத்திரத் தொகுதியாக அனைவரையும் கவர்ந்திருப்பது போடிநாயக்கனூர். தேனி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 2019 பொதுத் தேர்தலில் இங்கு வெற்றி பெற்றவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். அதிமுக வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்றத் தொகுதி இதுதான்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் களம் காண்கிறார்.

அவரை எதிர்த்து அவரின் பரம அரசியல் எதிரியான தங்கத் தமிழ்ச் செல்வன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதனால் போடிநாயக்கனூர் ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாறியிருக்கிறது.

71 வயதான ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்துப் போட்டியிடும் தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு வயது 60.

திறமையான மேடைப் பேச்சாளர். விவாதங்களில் அனல்பறக்க தனது வாதங்களைத் தெறிக்க விடுபவர்.

இதற்கு முன்பு 2016 சட்டமன்றத் தேர்தலில் அருகிலுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தொகுதியில் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டார் தங்கத் தமிழ் செல்வன். காங்கிரஸ் கட்சி, திமுக இணைந்த கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

அந்த மும்முனைப் போட்டியில் பி.ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தனயனிடம் தோல்வியடைந்த தங்கத் தமிழ்ச் செல்வன் இப்போது தந்தையோடு மோதுகிறார்.

அதிமுகவின் முன்னணி போராளிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் தங்கத் தமிழ்ச் செல்வன். ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றவர். அவரின் மறைவினால் எழுந்த அரசியல் சிக்கல் போராட்டத்தில் சசிகலா பக்கமும் டிடிவி தினகரன் சாய்ந்தார் தங்கத் தமிழ்ச் செல்வன்.

பின்னர் அந்த அணியிலும் பிணக்கு ஏற்பட 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிரடியாக திமுக கட்சியில் இணைந்தார்.

பலம் வாய்ந்த துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை வீழ்த்த, இந்த முறை போடிநாயக்கனூர் தொகுதியில் அவரைக் களமிறக்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

பன்னீர் செல்வம், தங்கத் தமிழ்ச் செல்வன் இருவருமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். போடிநாயக்கனூரில் இந்த சமூக வாக்குகள் அதிகம்.

எனவே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011, 2016 என இரண்டு முறை தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் பன்னீர் செல்வம். ஆனால் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 15,608 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே திமுக வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றவர் பன்னீர் செல்வம்.

இந்த முறை தங்கத் தமிழ்ச் செல்வன் போட்டி வேட்பாளர் என்பதால் பன்னீர் செல்வம் எளிதாக வென்று விட முடியாது என்கின்றனர் அரசியல் கணிப்பாளர்கள்.

திமுகவுக்கு ஆதரவாக வீசும் அலையும் பன்னீர் செல்வம் எதிர்நோக்கும் இன்னொரு சவால். இருப்பினும் அமைதியானவர். அனைவரிடமும் இன்முகத்துடனும், பண்புடனும் பழகுபவர். துணை முதல்வர் பதவியின் பலம். ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் கொண்டு வந்த நாயகன் என்ற நற்பெயர். சாதி வாக்குகளின் சாதகம். அதிமுகவின் களப் பணி பலம். என பன்முகத்திலும் ஓபிஎஸ் என உலா வரும் பன்னீர் செல்வத்திற்கு சாதக அம்சங்கள் நிலவுகின்றன.

முக்கியமாக, அவரின் மகனே அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னின்று களப்பணியாற்றுகிறார். இதுதான் ஓபிஎஸ்சுக்கு இருக்கும் பெரும் பலம்.

ஓபிஎஸ் வென்றால்தான் மீண்டும் இரட்டைத் தலைமை

இன்னொரு கோணத்திலும் போடிநாயக்கனூர் தொகுதி அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகப் பார்க்கப்படுகின்றது.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் என இரட்டைத் தலைமையைக் கொண்டிருக்கிறது அதிமுக. பன்னீர் செல்வம் போடிநாயக்கனூரில் தோல்வியைத் தழுவினால் அவரின் செல்வாக்கு அதிமுகவில் கடகடவென சரியும்.

பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றால் அதிமுக பழனிசாமி என்ற ஒற்றைத் தலைமையை நோக்கி நகரும் சூழ்நிலை ஏற்படலாம்.

அதிமுக மீண்டும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை அமைக்கிறதோ இல்லையோ, பன்னீர் செல்வம் போடிநாயக்கனூரில் தோல்வியடைந்தால் அதன்பின்னர் எடப்பாடிதான் கட்சியின் ஏகபோகத் தலைவராக உருவெடுப்பார்.

போடிநாயக்கனூரில் பன்னீர் செல்வம் தோல்வியடைந்தால், சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது. துணை முதல்வர் பதவியையையும் இயல்பாகவே இழந்து விடுவார்.

எனவே, கட்சியில் அவரின் செல்வாக்கும், பிடியும் மேலும் சரியும்.

இந்தக் காரணங்களாலும் நட்சத்திரத் தொகுதியான போடிநாயக்கனூர் தமிழக மக்களின் பார்வையை ஈர்த்திருக்கிறது.

– இரா.முத்தரசன்