கோலாலம்பூர் : “தமிழ் மொழியை உயிருக்கு நிகராகவும் சமயத்தை நெறியாகவும் அமைத்து வாழ்ந்து வருபவர் முனைவர் மனோன்மணி. நல்ல தமிழையும் மரபுசார்ந்த இலக்கியத்தையும் இளையோருக்குப் புகட்டி தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது மட்டுமல்ல, தமிழ்ப்பணியாற்றுபவர்கள் மீது திட்டமிட்டே வீசப்படும் அவதூறு” என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
“மலேசிய இளையத் தலைமுறையினரிடையே மரபுகவிதைத் தொடர்பான ஈர்ப்பை ஏற்படுத்தி, மரபுக் கவிஞர்களை உருவாக்கும் பெரும்பணியை மேற்கொண்டு வரும் முனைவர் மனோன்மணி அவர்கள், இந்து சமயத்திற்கு எதிரானவர் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி சிறுமைப்படுத்த முயலும் பொறுப்பற்ற தரப்பினருக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது” என்று அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
மலேசியத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்கு அறிமுகமான உப்சி தமிழ்ப்பல்கலைகழகத்தின் விரிவுரையாளரும் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவருமான முனைவர் மனோன்மணி, மறைந்த இறையருள் கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் முதன்மை மாணவர்களில் ஒருவராவார்.
கவிஞரின் மறைவுக்கு பின்னர், யாப்பிலணக்கத்தை இளையத் தலைமுறையினரிடையே கொண்டு சேர்ப்பதில் தீவிர ஈடுபாட்டுடன் செயல் பட்டு வருபவராவார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்த யாப்பிலக்கண வகுப்புக்கு தலைமையேற்று, நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வகுப்பெடுத்து அவர்களைப் பட்டைத் தீட்டியவர் முனைவர் மனோன்மணி.
“தினமும் விபூதி வைத்துக் கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மைகளை மாணவர்களுக்கு சொல்லித் தருவது மட்டுமில்லாமல், அதனை முழுமையாக கடைப்பிடிப்பவர் முனைவர். மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு பூஜை பாடல் வரிகளைப் பாடுவது மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் முனைவர் மனோன்மணி என்பதனை அவரை அறிந்த அனைவரும் அறிவர். முனைவர் மனோன்மணி அவர்களை இந்து மதத்திற்கு எதிரானவர் என்பவர் போல சித்தரிக்க முயல்வது சிறுபிள்ளைத்தனமானதும் தீயநோக்கம் கொண்டதுமாகும். அந்த செயலை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டிக்க வேண்டும் என்று சங்கத்தின் புலனக்குழுவில் சங்க செயலவையினர் தங்களது கருத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர்” என்றும் இராஜேந்திரன் தன் அறிக்கையில் குறிப்பிட்டார்.
“முனைவர் மனோன்மணி மீதான அவதூறு அடிப்படையற்றது என்பதை தமிழோடு பயணிப்பவர்கள் அறிவார்கள். ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்றால், குறைந்தபட்சம் குற்றம் சுமத்துபவர் தன்னளவிலாவது அந்த விவகாரத்தில் உண்மை இருக்கிறது என்பதில் தெளிவைப் பெறவேண்டும். எங்கிருந்தோ வந்ததாகச் சொல்லப்படும் ஒரு மொட்டைக் கடிதத்திற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கியதே வேலையற்றச் செயல். அதன் உண்மைத் தன்மை குறித்து அறிந்து செயல்படாதது அறத்திற்கு புறம்பான செயல். மொட்டை கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படும் சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களுடனும் நீண்ட நேரம் பேசினேன். அந்த மூவரும் சராசரியான மாணவர்கள் இல்லை, அறிவு ஜீவிகள் என்பதை அவர்களுடனான உரையாடலின்போது உணர்ந்தேன். அவர்களை யாரும் தங்கள் கருத்துத் திணிப்புகளால் திசை திருப்பிவிட முடியாது. அவர்கள் தமிழின்பால் கொண்டுள்ள ஈடுபாட்டையும் உணர முடிந்தது. இவர்களது விருப்பமின்றி இவர்களுக்கு பெயர் மாற்றம் செய்துவிட முடியுமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அப்படியொரு தெளிவை அவர்களிடம் கண்டேன்” என்றும் இராஜேந்திரனின் அறிக்கை குறிப்பிட்டது.
இராஜேந்திரனின் அறிக்கையில் பின்வருமாறு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது:
“இதை வாசியுங்கள். உங்களுக்கும் அந்த உண்மை புலப்படும்.
“ஐயா… நான் தமிழ் இலக்கியத்தோடு பயணிக்கிறேன். மரபுக் கவிதைக் கற்று அரங்கேற்றுகிறேன். தமிழ் நிகழ்ச்சிகளில் முகம் காட்டுகிறேன். பல மேடைகளில் முன்னணி வகிக்கின்றேன். அங்கெல்லாம் தமிழின் அடையாளமாக திகழ விரும்பினேன். நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொண்டால் நல்லது என்று தோன்றியது. புனைப்பெயராகத் தமிழ்ப்பெயரை சூட்டிக் கொண்டேன். என் பெற்றோருக்கு இதில் எந்த எதிர்ப்புமில்லை” என்பதுதான் அந்த மூவரின் நிலைப்பாடு.
“நமது நாட்டு கவிஞர்களான காரைக்கிழார், பாதாசன், வீரமான், கரு.திருவரசு, பெ.கோ.மலையரசன், பொன்.சந்திரன் என எண்ணற்றவர்கள் தங்களது இயற்பெயரை மாற்றி, புனைப்பெயர்களில் பயணிக்கிறார்களே, அதுவும் தவறா? எனக் கேட்கும் தெளிந்த அறிவோடு இருக்கிறார்கள் அந்த மாணவர்கள். இந்நிலையில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்…? ஏன் இந்த அறிக்கைகள்? ஏன் இந்த அவதூறுகள்? எதற்கு இத்தகைய புகார்கள் எல்லாம்? உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை பொதுவில் வைப்பதும் அதனை விவாதப் பொருளாகவும் ஆக்குவதில் அப்படி அக்கறை? ஒரு பல்கலைக்கழகத்தில் மதிப்புமிகு பொறுப்பில் இருக்கும் ஒருவரை காட்டிக் கொடுத்து களங்கப்படுத்துவதுதான் ஒரு சமய அமைப்பின் பணியா? முனைவர் மனோன்மணி அவர்களின் சேவைகள் பற்றி தெரியுமா? அவரது பொறுப்புணர்ச்சி குறித்து அறிந்திருக்கிறீர்களா? அவரது கற்பித்தல் வழியாகவும் தமிழ் மொழி, சமயம் ஆகியவை குறித்து அவர் வழங்கிய தெளிவுகளினாலும் பக்தியின் அவசியத்தை மாணவர்கள் உணர்ந்துள்ள வரலாறு தெரியுமா?
ஏதோ ஒரு நோக்கத்திற்காக அப்பழுக்கற்ற சேவையாளர்களை ஆதாரமே இல்லாமல் அசிங்கப்படுத்துவது தர்மமா?
தமிழில் பெயரிடுவது தப்பா?
மாணவர்களைத் தூயத் தமிழில் பெயர் வைக்கச் சொல்கிறார். அதனால் அவர் இந்து சதானக் கொள்கைகளுக்கு எதிரானவர் என மிக அர்ப்பமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதுவும் யாரோ ஒரு பெற்றோர் தனக்கு எழுதிய மொட்டைக் கடிதத்தை காட்டி சமூகவலைத் தளத்தில் காணொளி ஒன்றினை அருண் துரைசாமி என்பவர் வெளியிட்டுள்ளார்.
மொட்டைக் கடிதத்தை மட்டுமே நம்பி, நாடறிந்த கல்வியாளரும் மாணவர்களால் போற்றப்படுவருமான முனைவர் மனோன்மணி மீது, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர், இந்து ஆகம அணி இயக்கத்தைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அருண் துரைசாமி, முனைவர் மனோன்மணியுடன் கருத்து பரிமாற்றம் செய்து இருக்க வேண்டும்.
அப்படி செய்யாமல், ‘மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து மொட்டைக் கடிதத்தை பெற்றேன்’ எனச் சொல்லி முனைவர் மனோன்மணி மீது புழுதி வாரி இறைத்திருப்பது பொறுப்பான செயலல்ல. இது, அடிப்படையற்ற காழ்ப்புணர்ச்சியாக மட்டுமே தெரிகிறது.
அண்மைய காலமாக தமிழ் மொழி, கலை. பண்பாடு தொடர்பான பணிகளில் ஈடுபாடு காட்டும் சமூக ஆர்வலர்களை, இந்து சமயத்திற்கு எதிரானவர்கள் என காட்டும் தீவிரவாதப் போக்கினைக் குறிப்பிட்டத் தரப்பினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழுக்குத் தொண்டு செய்பவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்களைத் தமிழ்ச் சமுதாயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது.
தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அனைவரும் இந்து சமயத்திற்கு எதிரானவர்கள் என்பதுபோன்ற கண்டுபிடிப்பை உலகிற்கு உணர்த்தும் மேதாவி தனத்தை என்னவென்று சொல்வது?
இந்து சங்கத்திற்கு முன்பு தலைவராகப் பொறுப்பேற்றிருந்த முனைவர் ஆறு.நாகப்பன் அவர்கள், தமிழின்பால் தீராத பற்று கொண்டவர். நல்ல தமிழ் இலக்கியவாதி. அவருக்கும் சமய விரோதி எனும் சாயம் பூசப்படுமா?
களப்பிரர் காலத்தில் இருண்டுகிடந்த தமிழ் நிலத்தை அப்பரும் ஞானசம்பந்தரும் தமிழெடுத்துப்பாடி ஏற்படுத்திய மறுமலர்ச்சியால்தான் சைவமும் தமிழும் செழித்தோங்க முடிந்தது.
‘சந்தம் எல்லாம் அடிச் சாத்தவல்ல மறைஞானசம்
பந்தன் செந்தமிழ்ப்பாடி ஆடக்கெடும் பாவமே’ (திருஞா. தேவாரம் 88)
என்று தன் தமிழ்ப்பணியைப் பதிவு செய்தவர் திருஞானசம்பந்தர்.
அவரைத்தான் சுந்தரர் இப்படிப் போற்றுகிறார்.
‘நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்கு அரையன் நாணப்போவானும்’ (சுந்தரர் தேவா 7:4)
‘தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்’ எனத் தமிழைக் கொண்டாடியவர் நாவுக்கரசர்.
இவர்கள் சமயம் வளர்த்தவர்கள். தமிழின் துணையோடுதான் சமயம் வளர்த்தார்கள். தமிழின்பால் இவர்கள் பற்றும், மோகமும் கொண்டிருந்ததால் இவர்களையும் இந்து சமயத்திற்கு எதிரானவர்கள் என்று கூறுவார்களா?
இவர்களையும் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியுமா? இவர்களையும் சமயத்தையும் பிரித்து பேசத்தான் முடியுமா?
தமிழ்ப்பணியாற்றுபவர்களைப் போற்றுவதை அறப்பணியாக கொள்வோம்!
இங்கு தமிழ் வளர்ப்பவர்களையும் நல்ல தமிழ் வாழ உழைப்பவர்களையும் அரவணைத்து ஆதரிப்பதை அறப்பணியாகக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் பொறுப்புணர்ச்சி இல்லை என்றாலும் பாதகமில்லை. தூற்றி கேவலப்படுத்தும் இழிச் செயலையாவது துறக்க வேண்டும். அதுவே இந்தச் சமூகத்திற்குச் செய்யும் தலையாய சேவையாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, மலேசிய இளம் பெற்றோர்கள் தற்போது தங்களது குழந்தைகளுக்கு தூயத் தமிழில் பெயர் சூட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தன் மொழி சார்ந்த, இனம் சார்ந்த அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆர்வம் கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது பெருகியுள்ளது. ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கியும் முன் செல்கிறது. இந்த மாற்றத்தை இந்து சமயத்திற்கு எதிரான நடவடிக்கை எனக் குற்றஞ்சாட்டுவதில் அடிப்படை இல்லை.
ஒரு தமிழ்த்துறை விரிவுரையாளர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான ஆர்வத்தை ஏற்படுத்த, தாம் கற்றுத் தரும் மொழி சார்ந்த பெயரைச் சூட்டுவது எந்த வகையில் தவறாகும்? அதுவும் மாணவர்களின் விருப்பத்தின் பேரிலும் மாணவர்களது கோரிக்கையின் காரணமாக நிகழும் பட்சத்தில்…!
முனைவர் மனோன்மணி தமிழ் சார்ந்த பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது மட்டுமல்லாது, மற்றவர்கள் வெளியிடும் பலதரப்பட்ட நூல்களுக்கு ஆழமான ஞானத்துடன் ஆய்வுரை வழங்குவதிலும் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நச்சுத்தன்மைக் கொண்டதாகவே சங்கம் கருதுகிறது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து மரபு கவிதை, யாப்பிலக்கண வகுப்புகளை நடத்தி இளையத் தலைமுறை மரபு கவிஞர்களை உருவாக்கி வரும் முனைவர் மனோன்மணிக்கு ஆதரவாக மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மட்டுமல்ல, இந்நாட்டு தமிழ் அமைப்புகளும் அரண் அமைத்து நிற்கும்”
என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.