கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதால் 18 வயது வாக்களிக்கும் முறையை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதன் தலைவர் அப்துல் கானி சல்லே, தன்னியக்க வாக்காளர் பதிவு மற்றும் 18 வயது வாக்களிக்கும் முறை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதை நடைமுறைப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டியிருந்தாலும், அதன் திட்டமிடல் மற்றும் தயார் நிலையை கட்டுப்பாட்டு ஆணை பாதித்ததாகக் கூறினார்.
“எனவே, தேர்தல் ஆணையத்தின் ஆரம்ப திட்டமிடல் மற்றும் தயார்நிலைகள் பாதிக்கப்பட்டதால், பல்வேறு தடைகள் மற்றும் சிக்கல்களை மறு மதிப்பீடு செய்த பின்னர், தானியங்கி வாக்காளர் பதிவு மற்றும் 18 வயது வாக்களிக்கும் முறை 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-க்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.