கோலாலம்பூர் : கடந்த வாரத்தில், 18 வயதுக்கான வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் மார்ச் 27-இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் நேரடியாக இன்று காவல் நிலையம் வந்திருந்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன், சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ ஆகியோர் இன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மகாதீருடன் அவரின் மகன் முக்ரிஸ் மகாதீரும், மகள் மரினா மகாதீரும் காவல் நிலையம் வந்திருந்தனர்.
“ஏன் இவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. நாடாளுமன்றம் தற்போது நடத்தப்படாததால் மக்கள் நாடாளுமன்றம் வாயிலாகத் தங்களின் புகார்களைத் தெரிவிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க மாற்று வழிகளைத் தேடுகிறார்கள்” என மகாதீர் கூறினார்.
மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான வாக்குரிமை வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
எனினும், அந்த சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 2022-ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் அமுல்படுத்தப்பட முடியும் என நடப்பு மொகிதின் யாசின் அரசாங்கம் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
அந்த முடிவை எதிர்த்து கடந்த மார்ச் 27-இல் சுமார் 100 இளைஞர்களும், யுவதிகளும் கொண்ட குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.