கிள்ளான் : இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் நடைபெற்ற மஇகாவின் 74-ஆம் ஆண்டு ம.இ.கா தேசிய பொதுப் பேரவை பல்வேறு அரசியல் திருப்பங்களைக் கொண்டிருந்தது.
அதே வேளையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப சில அதிரடி முடிவுகளையும் எடுத்த மஇகா அம்னோவுக்கும் தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
ஆண்டுதோறும் மஇகா மாநாடுகளில் அம்னோவின் தலைவரும், தேசிய முன்னணியின் தலைவரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவது வழக்கமாகும். ஆனால் இந்த முறை தேசிய முன்னணி தலைவரான சாஹிட் ஹாமிடி அழைக்கப்படவில்லை.
எனினும் சாஹிட் ஹாமிடி இயங்கலை வழியாக மஇகா பேராளர் மாநாட்டில் உரையாற்றினார்.
பெர்சாத்து கட்சியுடன் இனி இணைந்து பணியாற்றப் போவதில்லை என அம்னோ முடிவெடுத்துள்ள நிலையில், பிரதமர் என்ற முறையில் மொகிதின் யாசின் மஇகா பேராளர் மாநாட்டில் இயங்கலை (ஒன்லைன்) வழியாக சிறப்புரையாற்றினார்.
மஇகா அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய திருப்பமாகும்.
மஇகா தேசிய முன்னணியைக் கைவிட்டு விட்டு தேசியக் கூட்டணிப் பக்கம் சாய்கிறது என்று எழுந்திருக்கும் குறைகூறல்களையும் விக்னேஸ்வரன் சாடினார்.
“பிரதமர் என்ற முறையில் மொகிதின் யாசினை அழைத்தோம். எனது கட்சியின் துணைத் தலைவருக்கு அவர் அமைச்சர் பதவியை வழங்கியிருக்கிறார். அதற்காக தேசிய முன்னணி சிபாரிசு செய்திருக்கவில்லை. நேரடியாகவே மொகிதின் அந்தப் பதவியை மஇகாவுக்கு வழங்கினார். எனவே, பிரதமர் என்ற முறையில் அவரை மஇகா மாநாட்டில் உரையாற்ற அழைத்ததில் தவறு ஏதுமில்லை” என்ற தனது முடிவையும் விக்னேஸ்வரன் தற்காத்தார்.
இன்றைய பேராளர் மாநாட்டில் மசீச தலைவர் வீ கா சியோங்கும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.