Home One Line P1 “அம்னோவும் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்” – விக்னேஸ்வரன் உரை

“அம்னோவும் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்” – விக்னேஸ்வரன் உரை

887
0
SHARE
Ad

கிள்ளான் : இன்று நடைபெற்ற மஇகாவின் 2020-ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதற்கு அம்னோவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“இப்போது நாம் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டுமே கொண்டிருக்கிறோம். நமது மாண்புமிகு பிரதமர் மொகிதின் யாசின் நமக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியை மட்டும் வழங்கியிருக்கிறார். ஆனால் நாம் சார்ந்திருக்கும் தேசிய முன்னணி சார்பில் நமக்கென துணையமைச்சர் பதவியோ, செனட்டர் பதவியோ பரிந்துரைக்கப்படவில்லை. இதனை பிரதமரும் விளக்கியிருக்கிறார். இது ஒரு முரண்பாடுதான். ஆனால் நாம் இன்னும் தேசிய முன்னணி கூட்டணியில்தான் இருக்கிறோம். அதன் காரணமாக, இதற்கான விளக்கத்தையும் நான் வழங்க விரும்புகின்றேன்” என விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி – தேசியக் கூட்டணி இடையிலான நமது கூட்டணி மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து பாடுபட்டால்தான் மக்களிடையே நம் மீதான நம்பிக்கையையும் நாம் பெற முடியும் என்றும் விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“இத்தகைய தூய்மையான சிந்தனை இலக்கோடு, நாம் அனைவரும் விரும்பும் நமது நாட்டின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாம் இதனை அணுக வேண்டும். அப்படி அணுகினால், அம்னோவுக்கும் பெர்சாத்து கட்சிக்கும் இடையிலான கருத்துவேறுபாடுகளை அந்தக் கட்சிகள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். 40 ஆண்டுகால அரசியல் பகைமை கொண்டிருந்த அம்னோவும், பாஸ் கட்சியும் தங்களுக்கிடையிலான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்போது அம்னோவும், பெர்சாத்து கட்சியும் கண்டிப்பாக தங்களின் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள முடியும்” என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“அம்னோவோ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெர்சாத்து கட்சியுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என அறிவித்து விட்டது. மஇகாவைப் பொறுத்தவரை நமது நீண்டகால பாரம்பரிய அரசியல் பங்காளியான அம்னோவின் முடிவை மதிக்கிறோம்.  இருப்பினும் தற்போதைக்கு பிரதமர் மொகிதின் யாசினின் தலைமைத்துவத்திற்கு எங்களின் ஆதரவை வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து பெர்சாத்து கட்சியுடன் இணக்கமாகப் பணியாற்றி வருவோம். தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில் இந்தக் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்வரை நமது இந்த நிலைப்பாடு தொடரும். அதுவரையில் அடுத்து வரும் அரசியல் நடப்புகளை நாம் பொறுமையுடன் தொடர்ந்து காத்திருந்து, கவனித்து வருவோம்” என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மலாய் அரசியல் கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடு

“இந்த சூழ்நிலையில் தேசிய முன்னணி தலைமைத்துவம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து ஒரு சுமுகமான, ஏற்புடைய உடன்பாட்டைக் காணவேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் தற்போது மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையிலான நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீட்டை பேச்சுவார்த்தைகளின் மூலம் வகுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக இந்த இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகளுக்கிடையே சில தியாகங்களும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் பின்பற்றப்பட வேண்டும். கொவிட்-19 பாதிப்பால் நலிவடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தவும், எதிர்வரும் பொதுத் தேர்தலின் மூலம் மேலும் நிலைத்தன்மையான, வலிமையான மத்திய அரசாங்கம் அமைவதை உறுதி செய்யும் உன்னத நோக்கத்திற்காகவும் நாம் இதனை செய்தாக வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

“நாம் அனைவரும் தூய்மையான நல்லெண்ணத்தோடு, நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும், மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் நமது கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் இத்தகைய சுமுகமான உடன்பாட்டு முடிவை எடுக்க வேண்டும். மலாய்க் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடுகள் குறித்த கருத்து வேறுபாடுகள்தான் அம்னோவுக்கும் பெர்சாத்து கட்சிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு முக்கியக் காரணமாகும். இது ஏமாற்றத்தையும் கவலையையும் தருகிறது. ஆனால், அதே வேளையில் பெரிக்காத்தான் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஸ் கட்சியுடன் அடுத்த பொதுத் தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அம்னோ முடிவெடுத்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. எனவே, இப்போது எழுந்துள்ள கேள்வி அம்னோவின் முடிவை மஇகாவும், தேசிய முன்னணியும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதுதான். தற்போதுள்ள புதிய அரசியல் சூழ்நிலையில் தேசிய முன்னணியில் இடம் பெற்றுள்ள மஇகாவும், மசீசவும் தங்களின் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என அம்னோ கூறியிருக்கிறது. மஇகா தற்போது 9 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. அம்னோ வேண்டுகோளின்படி பார்த்தால், நாம் சுமார் 35 விழுக்காட்டு தொகுதிகளை மஇகா சார்பில் தியாகம் செய்யவேண்டும். நாம் நமது தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அம்னோ ஏன் தனது பங்காக, தனது கடமையாக சுமார் 10 விழுக்காட்டுத் தொகுதிகளை விட்டுக் கொடுக்கக்கூடாது” எனவும் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

ஆனால் இது தவிர வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் இருக்குமானால், நாட்டின் நலன் கருதியும், கட்சியின், இந்திய சமுதாயத்தின் நலன் கருதியும் ஒரு நியாயமான நல்ல முடிவை மஇகா எடுக்கும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

“இப்போதுள்ள அரசியல் நெருக்கடியில் எதிர்கால சமுதாயத்தினர் பெருமைப்படக் கூடிய ஒரு சிறந்த முடிவை எடுப்பதும், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான நல்ல தலைமைத்துவத்தை வழங்குவதும்தான் நமது கடமை என்பதை உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறேன். தேசிய முன்னணி வெற்றி பெறுவது என்பது “என்ன வேண்டுமானாலும் செய்து” வெற்றி பெறுவதாக இருக்கக் கூடாது. மாறாக, அந்த வெற்றி நமது உறுப்பினர்களின் வெற்றியாக, மக்களின் வெற்றியாக, நாட்டின் வெற்றியாக இருக்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.