கோலாலம்பூர் : நகர்புறத்தில் வாழும் வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குவதில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மனிதவள அமைச்சு பல்வேறு ஏற்பாடுகளையும், கண்காட்சிகளையும் நாடு முழுக்க நடத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் 1 தொடங்கி, 10 மாநிலங்களில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்புத்திட்டம் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதியோடு ஒரு நிறைவை அடைந்தது. இந்த திட்டத்தில் 34,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் முன்வைக்கப்பட்டன. 164 முதலாளிகளும் பங்கு பெற்றனர்.
கோலாலம்பூர் செத்தியாவாங்சா சமூக மையத்தில் 39 முதலாளிகள் 10,592 வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்த வேலை வாய்ப்புக் கண்காட்சி நடைபெற்று நிறைவு பெற்றது.
கண்காட்சிகள் நடத்தப்பட்ட 10 மாநிலங்களில் இதுவே மிகப்பெரிய கண்காட்சியாகும்.
நகர்புறங்களில் வாழும் வசதி குறைந்தவர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை நிவர்த்தி செய்ய இந்த திட்டம் மனிதவள அமைச்சின் பெர்கேசோவால் (சொக்சோ) மேற்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்புத் தவிர, வேலைக்கான ஆலோசனை, நேர்காணல் மற்றும் சுயகுறிப்பு (Resume) தயார் செய்யும் முறை, தொழில் பதிவதற்கான ஆலோசனை, நிதி ஆலோசனை, பயிற்சிகள், இ-காசே (e-kasih) பதிவு போன்ற சேவைகளும் வழங்கப்பட்டன.
இதற்காக, பெர்கேசோ அதிகாரிகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 23 PPR குடியிருப்புகளில், 789 பேர்களைப் பேட்டி கண்டுள்ளனர். அதன் பயனாக வேலையில்லாமல் இருக்கும் 50 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பங்கு கொள்ளும் நிறுவனங்களுக்கு 6,000 ரிங்கிட் வரை ஊதிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தொடர்ந்து 54 பெர்கேசோ கிளைகளிலும் இந்த வேலை வாய்ப்புக் கண்காட்சி நடத்த பெர்கேசோ பரிந்துரைத்துள்ளது.
இது தவிர MYFutureJobs வழியாகவும் வேலைகளைப் பெறலாம். 190,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இன்றைய தேதி வரை 48,000 பேர் வேலைகளைப் பெற்றுள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியை நேரடியாகப் பார்வையிட்ட மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன், இதற்கான ஏற்பாடுகளைப் பாராட்டினார்.
நகர்புற வசதி குறைந்தவர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சிகள் நடத்தப்படுவதாக சரவணன் மேலும் கூறினார்.
“வேலைவாய்ப்புகள் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதைவிட இளைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்” என்றும் சரவணன் கேட்டுக் கொண்டார்.
மேற்கண்ட நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: