Home நாடு “நட்பு, சுற்றத்தாருடன் உள்ளத்தால் இணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

“நட்பு, சுற்றத்தாருடன் உள்ளத்தால் இணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

671
0
SHARE
Ad

ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

ஒரு மாத காலம் புனித ரம்லான் மாதத்தில் நோன்பு இருந்து, இன்று அதன் நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லீம் சமய சமூகத்தினருக்கும், மஇகாவின் முஸ்லீம் சகோதர உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஹரிராயா பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மீண்டும் ஒரு கடுமையான, நெருக்கடியான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் நாம் ஹரிராயா பெருநாள் கொண்டாட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்.

இருப்பினும், மக்கள் நலன்கள் முக்கியம், குறிப்பாக உடல் நலமும், தேவையற்ற நோய்த்தொற்றைத் தவிர்ப்பதும் அவசியம் என்ற நோக்கில் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாம் பொறுமையுடன் சகித்து ஏற்றுக் கொள்வோம்.

#TamilSchoolmychoice

இனிவரும் காலங்களில் இதுவும் கடந்து போகும், நிலைமைகள்  மாறும் என எதிர்பார்த்திருப்போம். அடுத்து வரும் ஆண்டில் நாம் மீண்டும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் மலேசியர்களாக ஒன்றிணைந்து ஹரிராயா பெருநாளை கொண்டாடி மகிழ்வோம் என்ற நம்பிக்கையைக் கொள்வோம்.

நமது பாரம்பரிய மலேசியக் கலாச்சாரத்திற்கே சவால் விடும் வண்ணம் இந்த கொவிட்-19 பாதிப்புகள் அமைந்திருக்கின்றன. திறந்த இல்ல உபசரிப்புகள் நடத்த முடியவில்லை. உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று அவர்களைக் காண முடியவில்லை. அண்டை மாநிலங்களில் வசிக்கும் பெற்றோர்கள் குடும்பத்தினரைக் காண செல்ல முடியாது. குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு உல்லாசத் தளங்களுக்கு ஓய்வெடுக்கச் செல்ல முடியாது என பல அம்சங்களிலும் நாம் வழக்கமாகக் கொண்டாடும் ஹரிராயா பெருநாள் இந்தமுறை இருக்கப் போவதில்லை.

எனினும், நமது அன்புக்குரிய நட்பு, சுற்றங்களுடன் நாம் உள்ளத்தால் ஒன்றாக இணைந்திருப்போம். புதிய, நவீனத் தொழில்நுட்பத் தொடர்புகளின் மூலம் தூரத்திலிருந்து கலந்துரையாடி அன்பைப் பரிமாறிக் கொள்வோம்.

முடிந்தவரையில் மற்றவர்களின் இல்லங்களுக்குச் செல்வதையும், மக்கள் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதையும் தவிர்ப்போம். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுவோம்.

அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளைத் தவறாமல் கடைப்பிடிப்போம். நமது உடல் நலத்தைக் கருத்தில் கொண்டும், நமது அன்புக்குரியவர்களின், பொதுமக்களின் நலன்களை மனதில் கொண்டும் நடந்து கொள்வோம்.

அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டம், தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் அத்தியாவசிய நடவடிக்கைகள் காரணமாக கூடிய விரைவில் நாம் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது.

எனினும், இதற்கு ஒவ்வொரு தனிநபரின் ஒத்துழைப்பும், கட்டுப்பாடும் இருந்தால்தான் நாம் நமது இலக்குகளை, நம்பிக்கைகளை அடைய முடியும்.

எனவே, அனைவரும் ஒத்துழைப்போம். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பின்பற்றி நடப்போம்.

ஹரிராயா பெருநாளை அனைவரும் இனிய முறையில் கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகள்.