Home நாடு “நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்” – சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

“நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்” – சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

893
0
SHARE
Ad

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் நோன்புப் பெருநாளின் முக்கிய நடவடிக்கையான “பாலிக் கம்போங்” செல்ல முடியாத சூழ்நிலை என்றாலும், இது ஒட்டுமொத்த மலேசிய மக்களின் நலனுக்காக என்பதைக் கருத்தில் கொள்வோம்.

நாம் வசிக்கும் இடத்திலேயே குடும்பத்தார், அண்டை அயலாருடன் கொண்டாடி மகிழ்வோம். திறந்த இல்ல உபசரிப்பை புதிய நடைமுறைகளோடு, அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து கவனமாக இந்தப் பெருநாளைக் கொண்டாடுவோம்.

#TamilSchoolmychoice

ஒருவருடத்திற்கு மேலாக நம்மை உலுக்கி வரும் கொரோனா தொற்றின் பரவலை முறியடிக்க ஒன்று சேர்ந்து முழுமூச்சாக செயல் பட்டால் ஒழிய கொரோனாவை ஒழிக்க முடியாது. அனைவரின் புரிதலும், ஒத்துழைப்பும் இதில் மிக மிக முக்கியம்.

ஒவ்வொரு பெருநாளும், அதன் பொது விடுமுறையும் ஒரு தனிப்பட்ட இன, மதத்தவர்களுக்கான கொண்டாட்டம் என்பதைக் கடந்து மலேசிய மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விழாக்கள். எனவே இம்முறை அண்டை அயலாரோடு நம் கொண்டாட்டத்தையும், குதூகலத்தையும் பகிர்ந்து கொள்வோம்.

மேலும் இந்த கொரோனா பாதிப்பால் வேலையிழந்தவர்கள், வருமானம் இழந்தவர்களையும் இந்த பெருநாள் கொண்டாட்டத்தில் நாம் அரவணைத்துக் கொள்வோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம். பிறருக்கு உதவக் கூடிய சூழலில் நாம் இருக்கிறோம் என்றால் அது இறைவன் நமக்கு வழங்கிய பாக்கியம்.

மனிதவள அமைச்சின் வழி பெஞ்சானா, பெமெர்காசா, திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள், சுய தொழில் செய்பவர்களுக்கான சமூக பாதுகாப்பு இப்படிப் பல திட்டங்கள் பிரத்தியேகமாக இந்த காலகட்டத்தில் செயலாக்கம் கண்டு வருகின்றன. தவிர வேலையிழந்தவர்களுக்கான தனிப்பட்ட கவுன்சிலிங், ஆலோசனைகள் மற்றும் மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. வேலையிழந்தவர்களும், வேலை தேடுபவர்களும் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் “https://www.myfuturejobs.gov.my” எனும் அகப்பக்கத்தில் பதிந்து வேலைக்கான வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அண்மையில் பணியாளர்களுக்கான “தொழிலாளர் நலன் காக்க தொழில் செய்வோம்” எனும் செயலியும் அறிமுகம் கண்டது. தேசிய அளவில் தொழிலாளர்களின் புகார்களுக்குத் தீர்வுகாணும் முயற்சி இது.

இப்படி பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் நாங்கள் தொடர்ச்சியாக  மேற்கொண்டு வருகிறோம். ஆக நாளைய விடியல் அனைவருக்கும் நல்லதாக விடியும் எனும் நம்பிக்கையோடு இந்த பெருநாளைக் கொண்டாடுவோம்.

முஸ்லிம் நண்பர்களுக்கு மீண்டும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.