Home உலகம் அருண் மகிழ்நன் & நளினா கோபால் தொகுத்த “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும்...

அருண் மகிழ்நன் & நளினா கோபால் தொகுத்த “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்”

1247
0
SHARE
Ad
அருண் மகிழ்நன்

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்திய மரபுடை நிலையமும் (Indian Heritage Centre) கொள்கை ஆய்வுக் கழகமும் (Institute of Policy Studies) இணைந்து கடந்த ஆண்டு  சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த ஆங்கில வரலாற்று நூல் ஒன்றை வெளியிட்டது.

“Sojourners to Settlers – Tamils in Southeast Asia and Singapore” என்பது அந்த ஆங்கில நூலின் பெயர். இரண்டு தொகுப்புகளாக வெளிவந்த இந்த நூல் 27 அத்தியாயங்களைக் கொண்டது. பழங்காலத்தில் தமிழர்களுக்கும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசியப் பகுதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்புகள், பரிமாற்றங்கள் குறித்தும் தமிழர் வரலாறு குறித்தும் இந்த நூல் விரிவாக விவாதித்தது.

இந்த நூலின் உருவாக்கத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அரும்பொருள் ஆய்வாளர்கள் ஆகியோர் பெரும் பங்காற்றியிருந்தனர்.

#TamilSchoolmychoice

தற்போது அந்த நூலை கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆலோசகரான அருண் மகிழ்நனும் நளினா கோபால் என்பவரும் இணைந்து தமிழில் தொகுத்துள்ளனர்.

ஆங்கிலத்தில் வெளிவந்த 27 அத்தியாயங்களில் முக்கியமான 18 அத்தியாயங்கள் மட்டும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியீடு கண்டிருக்கிறது “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்” என்ற தலைப்பிலான இந்த நூல்.

கடந்த மே 1-ஆம் தேதி இந்திய மரபுடமை நிலையம் இந்த நூல் குறித்த இணையக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி இந்த நூலையும் அறிமுகம் செய்தது. அந்த இணையக் கருத்தரங்கத்தில் அருண் மகிழ்நன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மேலும் பல தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் அந்த இணையவழிக் கருத்தரங்கத்தில் பங்கு பெற்றனர். இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் தற்போது தமிழக முதலமைச்சரின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவருமான  த.உதயசந்திரனும் இந்த கருத்தரங்கத்தில் பங்கு பெற்று கீழடி தொல்லியல் ஆராய்ச்சி குறித்து உரையாற்றினார்.

சுமார் ஓராண்டு கால உழைப்பின் பலனாக இந்தத் தமிழ் நூல் உருவாக்கம் கண்டுள்ளது.  சிங்கப்பூர் வரலாற்றில் இதுபோன்றதொரு விரிவான நூல் இதுவரையில் உருவாக்கப்பட்டதில்லை என அருண் மகிழ்நன் தனது நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டார்.

மே 25-ஆம் தேதிக்குப் பிறகு இந்த நூலை சிங்கப்பூரிலுள்ள இந்திய மரபுடமை நிலையத்தில் நேரடியாக சென்று வாங்கலாம்.

இணையம் வழி நூலை வாங்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பில் தொடர்பு கொள்ளலாம்:

https://readabook.store/collections/national-heritage-board/products/9789811458200 

மே 1-ஆம் தேதி “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்” நூல் குறித்து நடத்தப்பட்ட இணையம் வழிக் கருத்தரங்கத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: