கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தார் அசிஸின் கணவர் தௌபிக் அய்மான் மீதான விசாரணை விரைவில் முடிக்கப்படும் என்று நம்பப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் கமருடின் முகமட் டின் கூறுகையில், அவர்கள் இப்போது விசாரணையை முடிக்க இன்னும் பல ஆவணங்களைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
“விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆவணங்கள் உள்ளன. ஆவணங்களை நாங்கள் பெற்றவுடன், நாங்கள் விசாரணை அறிக்கையை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்புவோம்,” என்று கமருடின் மலேசியாகினியிடம் நேற்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத செயல்கள் சட்டம் 2001 இன் பிரிவு 4 (1) (அ) இன் கீழ் தௌபிக் மீது விசாரணை நடத்துவதாக காவல் துறை மார்ச் மாதத்தில் உறுதிப்படுத்தியிருந்தது.
தேடப்படும் தொழிலதிபர் ஜோ லோவிடம் இருந்து சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து சிங்கப்பூர் காவல் துறை தேசிய வங்கியை எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டது.