Home வணிகம்/தொழில் நுட்பம் எச்.எஸ்.பி.சி : வங்கிக் கிளைகளை மூடுவது ஏன்?

எச்.எஸ்.பி.சி : வங்கிக் கிளைகளை மூடுவது ஏன்?

866
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நமது நாட்டின் மிகப் பழமையான வங்கிகளில் ஒன்று ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பேங்க் என்று அழைக்கப்படும் வங்கி. ஹாங்காங் தீவு பிரிட்டன் வசம் இருந்தபோது வணிகத்துக்காக ஹாங்காங்கில் தொடங்கப்பட்ட வங்கி. பின்னர் உலகம் முழுவதும் பரவி, மலேசியாவிலும் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த வங்கி.

ஹாங்காங் வங்கி என அழைக்கப்பட்ட வங்கி தற்போது சுருக்கமாக HSBC Bank Malaysia எச்எஸ்பிசி பேங்க் மலேசியா என்ற பெயரில் மலேசியாவில் இயங்கி வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் 31 டிசம்பர் 2021-ஆம் தேதியோடு தனது கிளைகளில் 13 கிளைகளை மூடவிருப்பதாக எச்எஸ்பிசி பேங்க் மலேசியா அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

தற்போது 54 கிளைகளோடு எச்எஸ்பிசி பேங்க் மலேசியா செயல்படுகிறது. இந்தக் கிளைகளில் 13 வங்கிகளை நாடு முழுமையிலும் எச்எஸ்பிசி பேங்க் மலேசியா மூடவிருக்கிறது.

கிளைகள் மூடப்பட்டாலும், மூடப்படும் கிளைகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் அருகிலுள்ள மற்றொரு எச்எஸ்பிசி வங்கிக் கிளைக்கு தங்களின் வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும்.

நமது நாட்டில் மின்னியல் ரீதியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்த வங்கி எச்எஸ்பிசி பேங்க் மலேசியா.

இன்று ஏடிஎம் என்ற பெயரில் மின்னிலக்க அட்டை எல்லா வங்கிகளாலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் 1980-ஆம் ஆண்டுகளிலேயே ஈடிசி (ETC) என்ற பெயரில் முதல் மின்னியல் அட்டையை அறிமுகப்படுத்தியது எச்எஸ்பிசி வங்கிதான்.

அதைத் தொடர்ந்து பல வங்கிகளும் இத்தகைய மின்னியல் பரிமாற்ற அட்டையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர, இன்று நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டன இந்த ஏடிஎம் எனப்படும் மின்னியல் அட்டைகள்.

தற்போது உலகம் முழுவதும் வங்கிப் பரிமாற்றங்கள் இணையம் வழியாகவே நடைபெறுகின்றன. மேலும் பல வங்கிப் பரிமாற்றங்கள் கைப்பேசிகள் மூலமாகவே நடத்தப்படுகின்றன. இதனால் வங்கிகளுக்கு செல்வது இயல்பாகவே வாடிக்கையாளர்களிடம் மிகவும் குறைந்து விட்டது.

இதன் காரணமாகவே, செலவினங்களைக் குறைக்க வங்கிகள் கட்டம் கட்டமாக கிளைகளை மூடிவருகின்றன. எச்எஸ்பிசி பேங்க் மலேசியா மட்டுமின்றி மேலும் பல மலேசிய வங்கிகளும் இத்தகைய முடிவுகளை எடுத்து வருகின்றன.

கிளைகளுக்கு மாற்றாக, மின்னியல், இணையப் பரிமாற்றம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தங்களின் தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்த வங்கிகள் முதலீடுகளைச் செய்கின்றன.

இதன் காரணமாகவே, வங்கிக் கிளைகளை மூடும் நிலைமை நமது நாட்டில் மட்டுமின்றி, மேலும் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது.