கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானுக்கு எதிராக காவல் துறை விசாரணை நடத்தி வருவதை அதன் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
தகியுடினுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அக்ரில் கூறினார்.
“புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்பட்டால், விசாரணைக்கு உதவ தொடர்புடைய நபர்கள் அழைக்கப்படுவார்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் உத்தரவை மீறியதாகக் கூறப்படும் தக்கியுடினுக்கு எதிரான புகாரை காவல் துறை விசாரித்து வருவதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை விரைவுபடுத்துவதற்காக மாமன்னரின் கருத்துக்களைப் புறக்கணித்ததாகக் கூறப்படும் தக்கியுடினின் அறிக்கையை விசாரிக்குமாறு அமானா இளைஞர் தலைவர் ஷஸ்னி முனீர் முகமட் இத்னின் காவல் துறையில் புகார் பதிவு செய்துள்ளார்.