புடாபெஸ்ட் (ஹங்கேரி) – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “எஃப்” பிரிவில் காற்பந்து உலகின் பரம வைரிகளான பிரான்சும் போர்ச்சுகலும் மோதின.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே தலா 2 கோல்கள் போட்டு சமநிலை கண்டன. இதன் மூலம் இரண்டு குழுக்களுமே அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களுக்குள் தேர்வாகியுள்ளன.
எஃப் பிரிவில் பலம் வாய்ந்த 3 குழுக்கள் இடம் பெற்றிருந்தன. ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகியவையே அந்த 3 நாடுகள். இந்த மூன்று நாடுகளுமே ஐரோப்பியக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்புள்ள நாடுகளாகக் கருதப்பட்ட வேளையில், எந்த நாடு குழு ஆட்டங்களில் இருந்தே வெளியேறும் என்ற எதிர்பார்ப்பு காற்பந்து இரசிகர்களிடையே ஏற்பட்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக 3 குழுக்களுமே அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களுக்குள் தேர்வாகியிருக்கின்றன. எஃப் பிரிவில் 4-வது குழுவாக இடம் பெற்றிருந்த ஹங்கேரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், மூன்று காற்பந்து மாமலை நாடுகளுடன் மோதி வெல்ல முடியாமல் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறியது.
2016-இல் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபார ஆட்டத்தினால் கிண்ணத்தைக் கைப்பற்றி வெற்றியாளரான போர்ச்சுகல் தொடர்ந்து இரண்டாவது முறையும் அந்த சாதனையைப் படைக்குமா என்ற ஆர்வம் காற்பந்து இரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ரொனால்டோ தொடர்ந்து இந்த முறையும் போர்ச்சுகலுக்கு விளையாடுகிறார். இன்னும் சிறந்த ஆட்டத்தைக் கொண்டிருக்கிறார் என்பதால் இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.
ஏற்கனவே, ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த விளையாட்டாளர் என்ற சாதனையையும் அவர் புரிந்திருக்கிறார்.