Home கலை உலகம் மின்னல் பண்பலை வானொலிக்கு புதிய தலைவராக “கவித்தமிழ்” கிருஷ்ணமூர்த்தி நியமனம்

மின்னல் பண்பலை வானொலிக்கு புதிய தலைவராக “கவித்தமிழ்” கிருஷ்ணமூர்த்தி நியமனம்

1348
0
SHARE
Ad

(நாட்டின் அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் புதிய நிருவாகத் தலைவராக கு.கிருஷ்ணமூர்த்தி (படம்) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனம் குறித்தும், புதிய தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் பின்னணி குறித்தும், மின்னல் வானொலி குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

மலேசிய அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் புதிய நிருவாகத் தலைவராக கு.கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றிருக்கிறார்.

ஜுன் 13-ஆம் நாள் வரை பொறுப்பில் இருந்த திருமதி இராதா, அதுவரை இடைக்கால நிருவாகியாக பொறுப்பு வகித்து வந்தார். குமரனுக்கு அடுத்து பொறுப்பிற்கு வந்த திருமதி சுமதி, பதவி உயர்வு பெற்று தொலைக்காட்சி நிருவாகப் பிரிவுக்கு சென்ற நிலையில் இடைக்கால ஏற்பாடாக மின்னல் பண்பலை வானொலியின் தற்காலிக நிருவாகியாக 2020 அக்டோபர் 22-ஆம் நாள் முதல் இராதா பொறுப்பு வகித்து வந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது ஜூன் 14-ஆம் நாள் முதல் கிருஷ்ணமூர்த்தி குப்பன் புதிய நிருவாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய எல்லையைக் கடந்து உலகளாவிய அளவில் நேயர்களைக் கொண்டிருக்கும் மின்னல் வானொலி, தமிழில் முதன் முதலில் 24 மணி நேர ஒலிபரப்பைத் தொடங்கிய வானொலியாகும்.

அந்தப் பெருமைக்குரிய ஆர்டிஎம் மின்னல் வானொலியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு, வானொலி நேயர்களின் சார்பில் முதற்கண் வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகட்டும்.

மிகவும் நெருக்கடியான கொரோனா காலக்கட்டத்தில் மின்னல் பண்பலை வானொலியை வழிநடத்திய திருமதி இராதாவின் சேவையும் பாராட்டுக்குரியது.

கோடிக்கணக்கான ‘வோல்ட்’ மின்னாற்றலை நொடிப் பொழுதில் பெறும் மின்னல் என்னும் பேராற்றல், அதை தன் வசம் வைத்துக் கொள்ள வழியின்றி அகப்படும் ஏதாவதொன்றின்வழி இறக்கி வைக்க பூமியை நோக்கி வெகுவேகமாகப் பாயும் வேளையில், புவியின் காந்த ஆற்றலும் மின்னலைக் கவருவதால் மின்னலின் பாய்ச்சல் இரட்டிப்பாகிறது. அந்த அவசரப் பொழுதில் தன்வசம் எது சிக்கினாலும்  அதைத் தீய்த்து அழித்துவிடும் குணம் கொண்டதுதான் மின்னல்.

இவ்வாறு மாந்தர் குலத்திற்கு மருட்டலையும் மிரட்சியையும் அதிரடியாகக் கொடுக்கும் மின்னலின் பெயரை, ‘அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’ என்னும் பாடல் வரிகளைப் போல காற்றில் மெல்லத் தவழ்ந்து வந்து நம் செவிக்கும், செவியினூடாக சிந்தைக்கும் இன்பம் பயக்கும் ஒலியோசையை திகட்டாமல் அள்ளியள்ளி வழங்குவதுடன் அல்லி மலரினும் மேலான இதந்தரும் இன்னோசையை வானவீதியில் சுமந்துவரும் வானொலிக்குப் பொருத்தமான பெயர் சூட்டிய பெருமக்களின் எண்ணத்தை எண்ணிப் பார்க்கிறேன்; ஒன்றும் புலப்படவில்லை எனக்கு; ஆனாலும், ஏதோ நுட்பமான காரணம் இருந்திருக்க வேண்டும் போலும், சம்பந்தப்பட்ட அவர்களுக்கு!

அத்தகைய மின்னல் வானொலிக்கு பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணமூர்த்தி, இதே வானொலி ‘ஒலியலை-6’ என்னும் பெயருடன் வான வீதியில் வலம் வந்த காலத்தில் இணைந்து, பின் பிரிந்து, மீண்டும் இணைந்தவர்.

புத்ரா பல்கலைக்கழகத்தின் விவசாய வாணிபத் துறை இளங்கலைப் பட்டதாரியான இவர், பொருளாதார திட்டமிடல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

1998 காமன்வெல்த் போட்டியின்போது விளையாட்டு செய்திக்காக தற்காலிக பணியில் ஆர்டிஎம் வானொலியில் சேர்ந்திருக்கிறார்.

கடந்த நூற்றாண்டும் இந்த நூற்றாண்டும் இணைந்து புத்தாயிரத்தாம் ஆண்டு பிறந்த வேளையில், வானொலி-6 இல் மீனாகுமாரி, முருகையா முத்துவீரன், முனைவர் மு.சங்கர்,  சாந்தி, தமையந்தி, குமரன், விவேகானந்தன், காந்தி காசிநாதன், பார்வதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அடங்கிய பட்டாளமே இணைந்தது என்று தெரிவித்தார் கிருஷ்ணமூர்த்தி.

அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், விளையாட்டுச் செய்தி தொகுப்பாளர் என்றெல்லாம் வானொலியில் பல துறைகளில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி,  2003-இல் அங்கிருந்து விலக நேர்ந்தது.

ஆனாலும் அடுத்த ஈராண்டுகளில் நிரந்தரப் பணியாளராக மீண்டும் மின்னல் வானொலியில் இணைந்தார் கிருஷ்ணமூர்த்தி.

நிறைந்த பட்டறிவும் அகண்ட பார்வையும் வாய்க்கப்பெற்ற அவர் இப்பொழுது, மலேசியத் தமிழ் வானொலி நேயர்களுக்குப் பாத்திரமான மின்னல் பண்பலை வானொலியை வழிநடத்த முன்வந்திருக்கிறார்.

புதிய தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு சில கோரிக்கைகள்

இதற்கிடையில், சலனம், மோகனம், கிரணம் போன்ற இசை வட்டுக்களின் பாடலாசிரியராகவும் முத்திரைப் பதித்த கிருஷ்ணமூர்த்தி, கலைத்துறையிலும் தடம் பதித்திருக்கிறார். உரைவீச்சு என்னும் புதுக்கவிதையில் பெருநாட்டம் கொண்டு கவித்தமிழ் என்னும் பெயரில் தனி வலைப்பதிவை ஆரம்பித்து, தன் கவிதைகளை மலர வைத்திருக்கிறார். இந்த வலைத்தளத்தின் பெயரான கவித்தமிழ் என்னும் கூட்டுச் சொல்லை, தன் பெயரின் முன்னொட்டாக இணைத்துக் கொண்டு,  கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி என்னும் பெயரிலேயே அறியப்படும் இந்தப் புதிய தலைவரிடம் சில கோரிக்கைகளை பரிந்துரைக்க விழைகிறேன்.

மின்னலின் காலைக்கதிர் நிகழ்ச்சி, உண்மையில் சமூகப் பாங்குடன் படைக்கப்படுகிறது. அதன் அறிவிப்பாளர்கள், மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் புதுப்புது சிக்கலுக்கெல்லாம் தீர்வு காணும் முகமாக அவற்றை அறிமுகப்படுத்தி, தக்காரின் துணை கொண்டு தீர்வையும் முன் வைக்கின்றனர்.

பல்துறைசார் சாதனையாளர்களையும் சாதனை மாணவர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமும் பாராட்டிற்குரியது.

ஆனாலும், அறிவிப்பாளர்கள் கொச்சை மொழியைப் பயன்படுத்தித்  தமிழைச்  சிதைப்பதை இயன்றவரையில் தவிர்க்க வேண்டும். அத்துடன் தேவையற்ற அரட்டை அடிப்பதும் குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக, அண்மைக் காலமாக காலைக்கதிரில் சிரிப்பொலி அதிகமாக கேட்கிறது. அதே அறிவிப்பாளர்கள் மாலை வேளையில் வலம் வரும்பொழுதும் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லா நிலை தொடர்கிறது.

“தமிழை தமிழாக உச்சரிக்க வேண்டும்” என்று புதிதாக வந்துள்ள தலைவர் கண்டிப்பு காட்டுகிறார் என்று அறிவிப்பாளர்கள் சொல்வதில் இருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. மின்னல் படையை செம்மைப் படுத்தி, மலேசிய இந்திய சமுதாயம் குறிப்பாக வானொலி நேயர்கள் இன்னும் பயனுறும் வகையில் மாற்றி அமைப்பார் இந்தப் புதிய தலைவர் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது.

சில உச்சரிப்பு பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘பதிமூன்று’ என்றால் மூன்று கணவன்மார் என்று பொருள்; பதின்மூன்று என்றால்தான் 13 என்ற எண்ணைக் குறிக்கும்; அதைப்போல ‘ஐநூறு’ என்றால் அழகிய நூறு என்றாகும். ஐந்நூறு என்றால்தான் ஐந்து நூறுகள் என பொருள்படும். அன்னையர் என்பதை தாய்மார் என்றாலே போதும்; தாய்மார்கள் என கூடுதலாக இன்னொரு பன்மை விகுதியான ‘கள்’ளைச் சேர்ப்பது, தவறாகும்.

இதுபோன்ற பிழைகளை நமது அன்புக்குரிய அறிவிப்பாள அன்பர்கள் தெரிந்து தெளிவுபெற்றால் சமுதாயத்திற்கும் தமிழுக்கும் நல்லது. மின்னலின் பெருமையும் மேலும் கூடும்.

இதற்கெல்லாம் தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கையை ‘ஒருவழிப் பாதை’ உள்ளிட்ட வானொலி நாடகங்களை இயற்றிய நாடக ஆசிரியருமான கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி ஏற்படுத்தி இருக்கிறார்.

பனிமலர், இருவர் என்றெல்லாம் எண்ணற்ற சின்னத்திரை ஓவியங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதுடன் பாடல்களையும் புனைந்திருக்கும் இவர், ‘அகநக நட்பு’ எனும் தொலைக்காட்சித் திரைப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி – சீத்தாலெட்சுமி தம்பதியர்

கிருஷ்ணமூர்த்தியின் பல்கலைக்கழக வாழ்க்கை கால ஓட்டத்தில் அவரையும் அவரின் சக மாணவியான ரா.சீத்தாலெட்சுமியையும் மண வாழ்க்கையில் கொண்டு சேர்த்தது.

தமிழ்ப் பற்றுடன் கவி ஆர்வமும் கலை ஆர்வமும் மிக்க கிருஷ்ணமூர்த்தி, சமுதாய நாட்டமும் மிக்கவர். அதற்கு ஈடாக இவரின் இல்லத்தரசியான சீத்தாலெட்சுமியும் விளங்குகிறார். 2000-ஆம் ஆண்டு ஜூன் திங்களில் இவர்கள் மணம் முடித்தனர்.

கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பாலும், உழைப்பாலும், அனுபவங்களாலும், அவரின் புதிய சிந்தனைகளாலும் மின்னல் பண்பலை வானொலி மேலும் வளரட்டும் – ‘ஒலி’ரட்டும் என வாழ்த்துவோம்!

-நக்கீரன்