இலண்டன் : முக்கியமானக் காற்பந்து போட்டிகளில் நாட்டின் தலைவர்களும், அரச பரம்பரையினரும், பிரபல முன்னாள் காற்பந்து விளையாட்டாளர்களும் அரங்கில் அமர்ந்து ஆட்டத்தைக் கண்டு இரசிப்பது வழக்கம்.
ஆனால், சினிமா நட்சத்திரங்கள் வெகு அபூர்வமாகவே காற்பந்து போட்டிகளை நேரில் வந்து கண்டு இரசிப்பார்கள்.
அதற்கு மாறாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை) இங்கிலாந்து-இத்தாலி இடையிலான ஐரோப்பியக் கிண்ணத்திற்கான காற்பந்து இறுதியாட்டத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டோம் குரூஸ் கலந்து கொண்டு ஆட்டத்தைக் கண்டு இரசித்தார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் குழுத் தலைவரும் (கேப்டன்) பிரபல காற்பந்து விளையாட்டாளருமான டேவிட் பெக்காம் டோம் குரூஸ் அருகில் அமர்ந்திருந்தார்.
நேற்றைய ஆட்டத்தைக் கண்டு களித்த பிரமுகர்களில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் அவரின் துணைவியார் கேட் மிடில்டன், அவர்களின் மூத்த மகன் ஆகியோரும் அடங்குவர்.
காற்பந்து விளையாட்டுப் போட்டிகளின் மையமாக இங்கிலாந்து திகழ்ந்தாலும் கடந்த 55 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த தடவைதான் ஓர் அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் இறுதி ஆட்டத்திற்கு இங்கிலாந்து தேர்வாகியிருந்தது.
இருப்பினும் அந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இங்கிலாந்து இத்தாலியுடன் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டதால், பினால்டி கோல்களின் அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலைமை ஏற்பட அதில் 3-2 கோல் எண்ணிக்கையில் இத்தாலியிடம் இங்கிலாந்து தோல்வி கண்டது.