புத்ரா ஜெயா : தங்களின் 5 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் புறக்கணித்து வரும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கான புதிய சலுகைகள் அடங்கிய அமைச்சரவையின் முடிவு குறித்து இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 23) பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- அனைத்து ஒப்பந்த மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருந்தக அதிகாரிகள் என அனைவரின் ஒப்பந்த காலமும், அவர்களின் கட்டாய பணிக்காலம் முடிந்த பின்னர் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இந்த ஒப்பந்த நீட்டிப்பு உடனடியாக அமுலுக்கு வருகிறது.
- இதன் மூலம் அவர்கள் நிபுணத்துவ மேற் படிப்பைத் தொடர முடியும்.
- நிபுணத்துவ படிப்புகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்த மருத்துவர்களின் பணிக்காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் நிபுணத்துவப் படிப்பை நிறைவு செய்ய முடியும்.
- ஒப்பந்த மருத்துவர்களின் ஒப்பந்த காலத்தின் போதான சலுகைகள் அரசாங்க சேவையில் நிரந்தரமாக்கப்பட்டவர்களின் சலுகைகளைப் போன்றே வழங்கப்படும்.
- ஒப்பந்த மருத்துவர்கள் நிபுணத்துவப் படிப்புக்காக செல்லும்போது அவர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். மற்ற அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கும் இதே போன்ற சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
- இந்தப் பிரச்சனைக்கு குறுகிய கால, மத்திம கால, நீண்டகால தீர்வுகளைக் காண உடனடியாக சுகாதார அமைச்சையும் மற்ற தரப்புகளையும் உள்ளடக்கிய சிறப்புக் குழு மூலம் திட்டம் ஒன்றைத் தயாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள சுகாதாரப் பணியாளர்களின் சேவைகளையும் தியாகங்களையும் தாங்கள் உணர்ந்திருப்பதாகவும் மொகிதின் யாசின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.