கோலாலம்பூர் : நாட்டில் பல தரப்புகள் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அறைகூவல்கள் விடுத்து வருகின்றன.
இதற்குப் பதிலளித்த புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி “நான் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப் போவதில்லை. ஆனால், எனது அரசாங்கத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு இருக்கும். அவர்களுக்குப் பொருத்தமான எத்தகைய வாய்ப்புகளை வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
அதேவேளையில் அமைச்சரவை குறித்தும், அதில் இடம் பெறப் போகும் அமைச்சர்களின் பட்டியல் குறித்தும் வெளியிடப்பட்டு வரும் சமூக ஊடகத் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இஸ்மாயில் சாப்ரி கேட்டுக் கொண்டார்.
அமைச்சரவை குறித்து தான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்த இஸ்மாயில் சாப்ரி இந்த வாரத்திற்குள் தனது புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இஸ்மாயில் சாப்ரியின் முதற்கட்ட சவால் பணி புதிய அமைச்சரவையை உருவாக்குவதாகும். தன்னை ஆதரித்த கட்சிகளையும் திருப்திப்படுத்த வேண்டும், தான் சார்ந்திருக்கும் அம்னோவினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் இஸ்மாயில் சாப்ரி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.