Home Photo News “பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்”

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்”

624
0
SHARE
Ad

(மஇகாவின் 6-வது தேசியத் தலைவராகப் பதவி வகித்தவர் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம். பல ஆண்டுகள் இந்திய சமூகத்தின் சார்பில் அமைச்சராகவும் திகழ்ந்தவர். அவரின் பிறந்த நாள் அக்டோபர் 4 – மறைந்த நாள் அக்டோபர் 12. மாணிக்காவின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சிறப்புகளையும், வாழ்க்கைச் சம்பவங்களையும் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுடன் நடத்திய பிரத்தியேக சந்திப்பில் நினைவு கூர்கிறார் மாணிக்காவின் இளைய சகோதரர்  டத்தோ வி.எல்.காந்தன்)

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெறுகிறது. இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு, புதுடில்லியில் 1947 நவம்பர் மாதத்தில் ஆசியா உறவு மாநாடு (Asian Relations Conference 1947) ஒன்றை நடத்துகிறார். மகாத்மா காந்தியும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்தியா அடைந்த சுதந்திரத்தை காலனித்துவ ஆட்சியில் இருக்கும் மற்ற ஆசிய நாடுகளும் அடைய வேண்டும் என்ற வேட்கையின், நோக்கத்தின் வெளிப்பாடுதான் அந்த மாநாடு. ஆசியாவில் பல நாடுகளில் இருந்து சுதந்திரப் போராட்டம் நடத்திவரும் கட்சிகளும், தலைவர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அன்றைய மலாயாவில் சுதந்திரத்திற்காகப் போராடிய மலாயன் யூனியன் இயக்கத்தினரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மலாயாவுக்கும் சுதந்திரம் வேண்டும் என்ற போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்ட அந்தக் காலகட்டத்தில், மலாயாவில் இருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் கிள்ளானைச்  சேர்ந்த 21 வயது இந்திய இளைஞர் ஒருவரும் இடம் பெற்றிருந்தார். பூச்சோங்கிலுள்ள சுத்த சமாஜம் ஆசிரமத்தை நிறுவிய சுவாமி சத்யானந்தாவுடன் சென்றிருந்தார் அந்த இளைஞர்.

அத்தகைய இளம் வயதிலேயே அரசியல், சமூக ஈடுபாடு கொண்டு உழைத்ததோடு, மலாயாவின் சுதந்திரம் குறித்தும், மலாயா இந்தியர்களின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்த அந்த இளைஞனின் பெயர் வெங்கடாலம் மாணிக்கவாசகம்!

பிற்காலத்தில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் 6-வது தேசியத் தலைவராகவும், மலேசிய அரசாங்கத்தில் பல்லாண்டு காலம் அமைச்சராகவும் அரசியலில் உயர்ந்த டான்ஶ்ரீ வெ.மாணிக்கவாசகம்தான்அந்த இளைஞர்.

டத்தோ வி.எல்.காந்தன்

“எனக்கு நினைவு தெரிந்து அவரைப் பார்த்த நாள் முதல் அவரை இயல்பிலேயே, பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்தவராகத்தான் பார்த்தேன். குடும்பப் பொறுப்புக்கு தலைமையேற்றது, பின்னர் சமூகத் தலைவராக செயல்பட்டது, அதன் பின்னர் அரசியல் கட்சியில் தலைமைப் பொறுப்பு என எப்போதுமே ஒரு தலைவராகத்தான் அவர் திகழ்ந்தார். 1947-ஆம் ஆண்டில் அவர் நேரு கூட்டிய மாநாட்டில் கலந்து கொள்ள சென்றதுதான் அவரின் முதல் வெளிநாட்டுப் பயணம்” என தனது அண்ணனைப் பற்றிய பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் டத்தோ வி.எல்.காந்தன்.

இலட்சுமி காந்தன் என்ற முழுப் பெயர் கொண்ட காந்தன் தனது 84-வது வயதில், மாணிக்காவின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒரு பிரத்தியேக சந்திப்பில் தனது அண்ணனைப் பற்றிய பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பூர்வீகமும் – குடும்பமும்

குடையுடன் அமர்ந்திருப்பவர் மாணிக்காவின் தந்தையார் வெங்கடாசலம், அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் சிறுவன் மாணிக்கா – குழந்தையுடன் அமர்ந்திருப்பவர் மாணிக்காவின் தாயார் சுப்பம்மா

மாணிக்காவின் பூர்வீகம் தமிழ் நாட்டின் மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. மாணிக்காவின் தந்தையார் வெங்கடாசலம் பிள்ளை. தாத்தா சோமசுந்தரம் பிள்ளை (வெங்கடாசலத்தின் தந்தையார்).

மாணிக்காவின் தந்தை வெங்கடாசலம் 1891-இல் பிறந்தவர். மாணிக்காவின் தாயார் சுப்பம்மாள் திருச்சி ஶ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

மதுரையிலிருந்து புறப்பட்டு 1910-இல் தனது 20-வது வயதில் மலாயா வந்த வெங்கடாசலம் முதலில் கோலசிலாங்கூரில் ராஜா மூசா தோட்டம் என்ற தோட்டத்தில் குடியேறினார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால், கோலசிலாங்கூரில் உள்ள ஒரு தோட்டத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். அவ்வாறு பணிபுரிபவர்களை “கணக்குப் பிள்ளை” என்று அந்தக் காலத்தில் அழைப்பார்கள். வெங்கடாசலமும் அனைவராலும் கணக்குப் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.

தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால், கோலசிலாங்கூரில் இருந்து கிள்ளானுக்கு இடம் பெயர்ந்தார் வெங்கடாசலம். அவர் மலாயாவுக்கு சஞ்சிக் கூலியாகவோ, ஒப்பந்தப்படியோ வரவில்லை என்பதால் அவரால் சுதந்திரமாக இடம் மாறவும் செயல்படவும் முடிந்தது.

கிள்ளானுக்கு வந்த வெங்கடாசலம் 1930-ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் மேரு சாலையில்  பத்து பெலா சாலை சந்திப்பில் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வாங்கி அதில் பத்து கடை வீடுகள் கட்டினார். அதில் சில கடைவீடுகளை வாடகைக்கு விட்டார். வாடகை 20 வெள்ளி முதல் 30 வெள்ளி வரைதான் என்றாலும் அந்தக் காலத்தில் அது பெரிய தொகையாகும். ஒரு சைக்கிள் கடையும் மற்ற சில வணிகங்களும் அந்த வரிசை வீடுகளில் செயல்பட்டன.

அந்த இடத்தில் 3 இரட்டை மாடி வீடுகளையும் கட்டினார். அந்த வரிசை வீடுகளில் ஒன்றில் வெங்கடாசலம் குடும்பத்தினருடன் தங்கிக் கொண்டார். அதே இடத்தில் வெங்கடாசலம் குடும்பத்தினர் ஒரு மளிகைக் கடையும் நடத்தி வந்தனர்.

ஏழை மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளி நடத்திய வெங்கடாசலம்

டத்தோ வி.எல்.காந்தன் இளம் வயதில்…

மாணிக்காவின் தந்தையார் வணிக நோக்கத்துடன் மட்டும் செயல்படவில்லை. தமிழ்மொழி மீதான பற்றும், சமூகத்தினர் மீதான அக்கறையும் இருந்தது.

அதன் காரணமாக, தான் கட்டிய வீடுகளில் ஒன்றில் தனது சொந்த செலவில் தமிழ் கற்றுக் கொடுக்க ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து தனது பிள்ளைகள் அனைவரும் தமிழ் கற்க ஏற்பாடு செய்தார்.

அதே வகுப்புகளில் அருகிலிருந்து இலட்சுமி தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் இலவசமாக கல்வி போதிக்க வசதிகள் செய்து தந்தார் வெங்கடாசலம். இந்தப் பணியை தனது சொந்த செலவிலேயே செய்தார் அவர்.

9 பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பம்

வெங்கடாலசலத்துக்கு, மாணிக்காவுடன் சேர்த்து மொத்தம் 9 பிள்ளைகள். மூத்தவர் மகள் இராஜேஸ்வரி 1922-இல் பிறந்தார். அடுத்து விஜயரங்கம் 1924-இலும், மூன்றாவது பிள்ளையாக மாணிக்கவாசகம் 1926-ஆம் ஆண்டிலும் (அக்டோபர் 4) சரஸ்வதி 1928-ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

(டாக்டர்) கணேசன் 1930-ஆம் ஆண்டிலும், சண்முகம் 1932-ஆம் ஆண்டிலும் (டாக்டர்) இராஜகோபால் 1935-ஆம் ஆண்டிலும், லெட்சுமி காந்தன் என்ற காந்தன் 8வது பிள்ளையாக 1937-ஆம் ஆண்டிலும்  பிறந்தனர்.

9வது கடைசிப் பிள்ளையாக 1939-இல் பிறந்தவர் கிருஷ்ணவேணி.

“இவர்களில் விஜயரங்கம், தனது இரண்டாவது வயதிலேயே உடல் நலக் குறைவால் காலமாகிவிட்டார். எஞ்சிய நாங்கள் 8 பேரும் வளர்ந்தோம். மற்றொரு சகோதரி சரஸ்வதியும் உடல் நலக் குறைவால் தனது 21-வது வயதிலேயே அகால மரணமடைந்தார்.  இன்று உயிருடன் இருப்பவர்கள் நானும் எனக்கு மூத்த அண்ணன் இராஜகோபால், எனது இளைய சகோதரி கிருஷ்ணவேணியும்தான்” என்கிறார் காந்தன்.

பிரதமர் துன் அப்துல் ரசாக்குடன் மாணிக்கவாசகம்…

“எங்கள் 8 பேர்களில் எனக்கு மூத்தவரான சண்முகம் பிறக்கும்போதே கைகால்கள் சற்று ஊனமான நிலையில் பிறந்தார். அதன் காரணமாக நாங்கள் நடத்தி வந்த மளிகைக் கடையில் அண்ணன் சண்முகம் எப்போதும் கல்லாப் பெட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு கடையைப் பார்த்துக் கொள்வார். நான் காலையில் பள்ளிக்கூடம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் மத்தியான நேரத்தில் அந்தக் கடையில் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்வேன். சாமான்களை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அந்த வட்டாரத்தில் விநியோகிக்கும் பொறுப்பை கவனித்துக் கொண்டேன். ஒரு நாளைக்கு ஒரு பீக்கல் அளவுக்கு (அதாவது இன்றைய எடையில் சுமார் 60 கிலோ) சாமான்களை நான் விநியோகித்து வருவேன். துரதிர்ஷ்டவசமாக அண்ணன் சண்முகம் தனது 34-வது வயதிலேயே காலமாகி விட்டார்” என தங்கள் குடும்பத்தின் இளவயது சம்பவங்களை நினைவு கூர்ந்தார் காந்தன்.

மாணிக்கவாசகத்தை அவரின் 8-வது வயதிலேயே சிரம்பானில் உள்ள செயிண்ட் பால் ஆங்கிலப் பள்ளியில் (St Paul Institution) படிப்பதற்காக சேர்த்து விட்டார் வெங்கடாசலம்.

“இதற்கிடையில் ஜப்பானியர் ஆட்சிக் காலத்தின்போது தனது சகோதர சகோதரிகள் ஜப்பானியப் பள்ளிக்கு சென்று படித்தோம்” எனக் குறிப்பிட்டார் காந்தன்.

“எனது அண்ணன் மாணிக்கவாசகத்தின் தலைமைத்துவ ஆற்றலை ஜப்பானியர் காலத்திலேயே நான் கண்டு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜப்பானியர்கள் அவரை “கூச்சோ” என்ற வட்டாரத் தலைவர் பதவிக்கு நியமித்தனர். அப்போது அவருக்கு சுமார் 16 அல்லது 17 வயதுதான் இருக்கும். ஆனாலும், மலாய், ஆங்கிலம், தமிழ் என 3 மொழிகளும் தெரிந்திருந்ததால், மக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களின் பிரச்சனைகளை மொழிபெயர்ப்பு செய்து ஜப்பானியருக்கு எடுத்துச் சொல்லும் பணி அது. அந்தப் பணியில் மாணிக்கா பலருக்கு உதவினார். பல பேரை சயாமிய மரண இரயில்வே பணிக்கு செல்வதில் இருந்து முன்னெச்சரிக்கை செய்து தடுத்திருக்கிறார். நாங்கள் கிள்ளானில் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் புக்கிட் ராஜா தோட்டம் அமைந்திருந்தது. அதில் ஒரு பகுதி லெட்சுமி தோட்டம் என அழைக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்த பல இந்தியர்களை முன்னெச்சரிக்கை செய்து சயாம் மரண இரயில்வே பணிக்கு போகாமல் செய்தார் மாணிக்கா என எனக்குச் சொல்லப்பட்டது. மிகவும் அந்த ஆபத்தான பதவியை வகித்துக் கொண்டு ஜப்பானியர்களுக்கு தகவல் சொல்லிய அதே வேளையில் தன்னால் இயன்ற அளவுக்கு பொதுமக்களுக்கும் உதவிகள் செய்தார் மாணிக்கா” என்ற காந்தன் இதுதான் மாணிக்கா இயல்பிலேயே பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலைக் கொண்டிருந்தார் என்பதற்கான காரணம் என விவரித்தார்.

“எனது தந்தையாரின் உழைப்பாலும், தூர நோக்குச் சிந்தனையாலும் எங்களின் குடும்பம் ஓரளவுக்கு வசதியாக வாழ்ந்தோம். எங்கள் வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்தோம். அண்ணன் மாணிக்காவும் ஆடுகள் மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் வேலைகளைச் செய்திருக்கிறார். கிள்ளானில் எங்களின் தந்தை மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார். எப்போதும் அவர் காந்தி பாணியில் கதர்தான் அணிவார். மலாய், சீன மக்களும் அவரைப் பார்த்தால் “பிள்ளை வருகிறார்” என மிகுந்த மரியாதை தந்தனர். 1951-ஆம் ஆண்டில் எனது தந்தையார் வெங்கடாசலம் காலமாகிவிட்டார். அதன் பிறகு எனது அண்ணன் குடும்பத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து கிள்ளான் வட்டாரத்தில் எனது தந்தையாருக்கு இருந்த செல்வாக்கும், மரியாதையும் எனது அண்ணனுக்கும் கிடைத்தது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட மாணிக்கா கிள்ளானில் செல்வாக்குடன், முக்கிய சமூகத் தலைவராகப் பரிணமிக்கத் தொடங்கினார்” என தனது மாணிக்கவாசகம் தலைவராக உயர்ந்த பின்னணியை விவரித்தார் காந்தன்.

-இரா.முத்தரசன்

அடுத்து பகுதி 2 :

  • மஇகா அரசியலில் நுழைந்து வளர்ந்தது எப்படி?
  • 1955-ஆம் ஆண்டிலேயே துன் சம்பந்தனுக்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மாணிக்கா!
  • துணைவியார் கமலா அம்மையாரின் மறைவால் மனமுடைந்த மாணிக்கா!
  • 1968-இல் மஇகா துணைத் தலைவர் பதவியைத் துறக்க மாணிக்கா முன்வந்தது ஏன்?

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal