Home Photo News “பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-3)

“பிறப்பிலேயே தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்த மாணிக்கவாசகம்” (பகுதி-3)

810
0
SHARE
Ad

(மஇகாவின் 6-வது தேசியத் தலைவரான டான்ஶ்ரீ மாணிக்கவாசகம். பல ஆண்டுகள் இந்திய சமூகத்தின் சார்பில் அமைச்சராகவும் திகழ்ந்தவர். அவரின் பிறந்த நாள் அக்டோபர் 4 – மறைந்த நாள் அக்டோபர் 12! மாணிக்காவின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சிறப்புகளையும், வாழ்க்கைச் சம்பவங்களையும் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுடன் நடத்திய பிரத்தியேக சந்திப்பில் நினைவு கூர்கிறார் மாணிக்காவின் இளைய சகோதரர் டத்தோ வி.எல்.காந்தன். 3-ஆம் பகுதி தொடர்கிறது)

  • கிள்ளான் மஇகா செயலாளராக அரசியலில் வளர்ந்த மாணிக்கா
  • 1955-இல் மஇகா தலைவர் பதவிக்கு சம்பந்தனை எதிர்த்துப் போட்டியிட்ட மாணிக்கா

கிள்ளான் மஇகா கிளையின் தலைவர்களாக ஆர்.எம்.எம்.இலட்சுமணன் செட்டியார், அவருக்குப் பின்னர் நாச்சியப்பன் செட்டியார், அதன் பின்னர் ராஜம் ஐயர் (கிள்ளானில் உணவகம் நடத்தியவர்), போன்றவர்கள் பதவி வகித்த வேளையில், மாணிக்கா தொடர்ந்து கிள்ளான் கிளையின் செயலாளராகப் பதவி வகித்தார். இருந்தாலும் தேசிய அளவிலும் அரசியலில் ஈடுபட்டார்.

1950-1951-ஆம் ஆண்டுகளில் மாணிக்கா கிள்ளான் நகர மன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு சுவையான சம்பவமாகும். அப்போது கிள்ளான் வட்டார அதிகாரியாக (District Officer) (பின்னர் டான்ஶ்ரீ டத்தோ) முபின் ஷெப்பெர்ட் (Mubin Sheppard) என்ற ஸ்காட்லாந்து வெள்ளையர் பதவியில் இருந்தார் (பின்னாளில் முஸ்லீமாக மதம் மாறி, மலேசியக் குடியுரிமை பெற்று இங்கேயே தங்கி மலேசியா குறித்த பல வரலாற்று நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர்).

அமரர் டான்ஶ்ரீ டத்தோ முபின் ஷெப்பெர்ட்
#TamilSchoolmychoice

கிள்ளான் நகர மன்றத்திற்கு இந்தியர்கள் சார்பில் டாக்டர் சாத்தையா என்பவரை நியமிக்க விரும்பினார் முபின் ஷெப்பெர்ட். ஆனால், உள்ளூர் மஇகாவினரும், பொதுமக்களும் மாணிக்கா அந்தப் பொறுப்புக்கு வர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

“இதைத் தொடர்ந்து, யார் நகர மன்ற உறுப்பினராக வரவேண்டுமென கிள்ளான் மஇகா, பொது வாக்கெடுப்பு ஒன்றை இந்தியர்களிடையே நடத்தியது. நானும் கிள்ளான் வட்டாரத்தில் சுற்றி எனது அண்ணனுக்காகப் பிரச்சாரம் செய்தேன். இறுதியில் மாணிக்காவுக்கு சாத்தையாவைவிட இரண்டு மடங்கு வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன. மாணிக்காவே கிள்ளான் நகரமன்ற உறுப்பினரானார். ஆனால், சாத்தையா இதனை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார். இன்னொரு முக்கியத் தகவல் என்னவென்றால் அதே டாக்டர் சாத்தையாதான் எனது தந்தையார் இறந்த அன்று எங்கள் வீட்டிற்கு வந்து எனது தந்தையார் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியவர். அப்பாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் வீட்டிலேயே மரணமடைய நேர்ந்தது. அண்ணன் மாணிக்காதான் சைக்கிளில் சென்று டாக்டர் சாத்தையாவை அழைத்துவந்தார். எனது தந்தையார் மரணமடைந்ததை உறுதிப்படுத்தியவர் அதே டாக்டர் சாத்தையாதான்” என்றார் காந்தன்.

கிள்ளான் நகரசபை உறுப்பினரான மாணிக்காவின் செல்வாக்கு அந்த வட்டாரத்திலும், நாடு தழுவிய அளவில் மஇகா வட்டாரங்களிலும் நாளடைவில் பெருகத் தொடங்கியது.

1955-இல் சட்டமன்ற உறுப்பினரான மாணிக்கா

1954-ஆம் ஆண்டில் அம்னோ, மசீச, மஇகா மூன்றும் இணைந்தும் நேஷனல் அலையன்ஸ் என்ற தேசியக் கூட்டணியை அமைத்தன.

1955-ஆம் ஆண்டில் மலாயாவுக்கு முதல் பொதுத் தேர்தல், மாநில சட்டமன்றங்களுக்காக நடத்தப்பட்டது. திரெங்கானு, ஜோகூர் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் சிலாங்கூரில் கிள்ளான் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாணிக்கா.

1955-இல் சம்பந்தனை எதிர்த்துப் போட்டியிட்ட மாணிக்கா

அதிகாரபூர்வ தோற்றத்தில் மாணிக்கவாசகம் – மாமன்னரிடம் இருந்து டான்ஶ்ரீ விருதான PMN, சிலாங்கூர் சுல்தானிடம் இருந்து SPMS, PJK ஆகிய விருதுகளைப் பெற்றவர்

மாணிக்கா அரசியல் வட்டாரங்களிலும் இந்திய சமூகத்திலும், கிள்ளான் வட்டாரத்திலும் பிரபலமாகத் தொடங்கினார்.

1955-ஆம் ஆண்டில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல், இந்தியர்களின் அரசியல் வரலாற்றுப் பாதையில் மிக முக்கியமான நிகழ்வாகும்.

நடப்பு தேசியத் தலைவராக இருந்த கே.எல்.தேவாசரை எதிர்த்துப் போட்டியிட மேலும் 3 தலைவர்கள் முன்வந்தனர். தேவாசர் சிறந்த தலைவராகப் பார்க்கப்பட்டவர். என்றாலும், பஞ்சாபி இந்து சமூகத்தைச் சேர்ந்தவர். அவர், வடநாட்டவர்  என்பதால், தமிழர் ஒருவர் மஇகாவின் தேசியத் தலைவராக வரவேண்டும் என்ற அறைகூவல்கள் ஆங்காங்கு எழத் தொடங்கின.

தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு நாடு திரும்பியிருந்தார் துன் சம்பந்தன். சுங்கை சிப்புட் வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த அவர், தேவாசரை எதிர்த்துப் போட்டியிட முன்வந்தார் சம்பந்தன்.

துன் சம்பந்தன்

(டான்ஸ்ரீ) தர்மலிங்கம் என்ற குத்தகையாளரும் தேசியத் தலைவருக்கான போட்டியில் குதித்தார். இன்று நில ஆய்வு,நில சொத்துகள் துறையில் பிரபலமாக இருக்கும் குமார் தர்மலிங்கத்தின் தந்தைதான் தேசியத்  தலைவருக்குப் போட்டியிட்ட அந்த தர்மலிங்கம்.

தனது 29-ஆம் வயதிலேயே மஇகாவின் தேசியத்தலைவருக்கான போட்டியில் அந்த 1955-ஆம் ஆண்டில் பங்கெடுத்தார் மாணிக்கா. அவரின் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுவதாக இந்த அரசியல் நகர்வை நாம் பார்க்கலாம்.

நான்கு முனைப் போட்டியாக மாறியது 1955-ஆம் ஆண்டு மஇகா தேசியத் தலைவருக்கான போட்டி!

“இறுதியில் அந்தத் தேர்தலில் துன் சம்பந்தன் வெற்றி பெற்று மஇகாவின் 5-வது தலைவராகத் தேர்வு பெற்றார். நானும் அந்தத் தேர்தலில் அண்ணன் மாணிக்காவுக்காக தேர்தல் பணிகள் ஆற்றினேன். சம்பந்தனிடம் தோல்வியுற்றாலும், அவர் மீது மாணிக்காவுக்குப் பெரும் மரியாதை இருந்தது. எவ்வளவுதான் திறமைசாலியாக, தலைமைத்துவ ஆற்றலோடு திகழ்ந்தாலும், மாணிக்கா பட்டப் படிப்பு படிக்கவில்லை என்பதால் அவருக்கு பல்கலைக் கழகப் பட்டதாரிகள் மீது எப்போதுமே ஒரு மரியாதை இருந்தது. அந்த வகையில் ஒரு பட்டதாரியான சம்பந்தன் மீதும் அவர் பெரும் மரியாதை கொண்டிருந்தார்” என்றார் காந்தன்.

அந்த 1955-ஆம் ஆண்டு கட்சித் தலைவர் தேர்தலில், நான்கு போட்டியாளர்களில் சம்பந்தனுக்கு அடுத்து மிக அதிகமான வாக்குகளைப் பெற்றார் மாணிக்கா. அதன் காரணமாக, மஇகாவின் தேசியத் துணைத் தலைவரானார் மாணிக்கா.

அதன்பின்னர், தொடர்ந்து அடுத்த 18 ஆண்டுகளுக்கு அரசியல் நட்புறவும் இணக்கமும் சம்பந்தனுக்கும்-மாணிக்காவுக்கும் இடையில் இனிதே தொடர்ந்தது.

இங்கிலாந்துக்கு ஆசிரியர் பயிற்சிக்கு சென்ற காந்தன்

டத்தோ வி.எல்.காந்தன்

“1950-ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் எனது மூத்த சகோதரர் டாக்டர் கணேசன் இந்தியாவில் மருத்துவம் பயின்று கொண்டிருந்தார். எனது மற்றொரு அண்ணன் இராஜகோபால் சீனியர் கேம்பிரிட்ஜ் (ஐந்தாம் படிவம்) படித்து முடித்து விட்டு ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அண்ணன் கணேசன் என்னோடு வா நீயும் சென்னை வந்து மருத்துவம் படிக்கலாம் என இராஜகோபாலை அழைத்துச் சென்றார். மாணிக்காவும் அதற்கு சம்மதித்தார். சென்னையில் மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற இராஜகோபால் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது என்னிடம் ஒருமுறை பேசிய அண்ணன் மாணிக்கா ‘இப்போது நமது குடும்பத்தில் 2 பேர் மருத்துவம் படிப்பதால் உன்னை இலண்டனுக்கு சட்டம் படிக்க அனுப்புவது இப்போதைக்கு கஷ்டம். கொஞ்சம் காத்திரு’ என்றார். இந்த சமயத்தில் எனக்கும் இங்கிலாந்தில் உள்ள கேர்பி (Kirby) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் 1955-இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இங்கிலாந்து சென்று விட்டேன். இரண்டரை ஆண்டுகள் படிப்பு முடித்ததும், காஜாங்கிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினேன். இருந்தாலும் அண்ணன் எனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நினைவில் வைத்து பின்னர் என்னை இலண்டனுக்கு சட்டம் படிக்க அனுப்பினார்” என காந்தன் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கா

பிரதமர் துன் அப்துல் ரசாக்குடன் மாணிக்கவாசகம்…

1959-இல் சுதந்திரத்திற்குப் பின்னர் நடைபெற்ற மலாயாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் கிள்ளான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாணிக்கா. தொடர்ந்து துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1964 பொதுத் தேர்தலிலும் கிள்ளான் தொகுதியில் வெற்றி பெற்றார் மாணிக்கா. இந்த முறை அவரை முழு அமைச்சராக – தொழிலாளர் துறை அமைச்சராக – நியமித்தார் அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான்.

அந்த 1964 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சம்பந்தன் பொதுப்பணி, அஞ்சல், தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்க, அவரும் மாணிக்காவும் இந்திய சமூகத்தின் இரண்டு அமைச்சர் பிரதிநிதிகளாக தங்களின் அரசியல் பணிகளைத் தொடர்ந்தனர்.

1968 – மனைவியை இழந்த மாணிக்கா – அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு

மாணிக்காவின் துணைவியார் கமலா தேவி அம்மையார் – இளம் வயது தோற்றம்

“1968-ஆம் ஆண்டு என் அண்ணன் மாணிக்காவுக்கு மிகவும் சோதனையான, வேதனையான ஆண்டு. அந்த ஆண்டில் ஜூலை 12-ஆம் தேதி எனது அண்ணியார் கமலாதேவி மரணமடைந்தார். அண்ணியார் மீது எனக்கிருந்த அன்பு, மரியாதை, காரணமாக, அவர் மரணமடைந்த தேதி இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. அண்ணியாரின் மரணத்தினால் மிகவும் மனமுடைந்து போனார் மாணிக்கா. அந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேர்தலில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் முடிவை எடுத்தார் மாணிக்கா” என்ற இன்னொரு சுவாரசியத் தகவலையும் தெரிவித்தார் காந்தன்.

“அந்த சமயத்தில் மஇகா நடத்தப்பட்ட விதம் குறித்தும், கட்சியில் இருந்த சில நிலவரங்கள் குறித்தும் அவர் அதிருப்தி கொண்டிருந்தார். அப்போது சம்பந்தன் தலைவராக இருந்த தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார் மாணிக்கா. 1968-ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் சம்பந்தன் மீண்டும் தலைவராகத் தேர்வு பெற்றார். அடுத்து துணைத் தலைவருக்கான போட்டி வந்தபோது, மாணிக்கா எழுந்து, இந்த முறை நான் துணைத் தலைவருக்குப் போட்டியிடப் போவதில்லை. கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் என அறிவித்தார். மஇகா மாநாடு முழுக்க அப்போது ஆச்சரியமும், அதிர்ச்சியும் பரவியது. உடனடியாக எழுந்த சம்பந்தன், தேவாரம் பாடிய நால்வரை மேற்கோள் காட்டி “இந்த சம்பந்தன் இருக்கும்வரை என் பக்கத்திலேயே இந்த மாணிக்கவாசகமும் எப்போதும் இருப்பார்” என உணர்ச்சிமயமான வேண்டுகோளை முன் வைத்தார். அதோடு நில்லாமல், தனக்கு போடப்பட்ட மாலையைக் கழற்றி மாணிக்காவுக்கு அணிவித்து “எப்போதும் நீதான்யா துணைத் தலைவர்” என்று கூறிவிட்டார் சம்பந்தன்.

துன் சம்பந்தன், துங்கு அப்துல் ரகுமான்

கட்சியினரும் நெருக்குதல் தர, மீண்டும் துணைத் தலைவராகத் தொடர ஒப்புக் கொண்டார் மாணிக்கா. அதைத் தொடர்ந்து மாணிக்கா துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்கிறார் காந்தன்.

துணைத் தலைவராக நீடிக்க ஒப்புக் கொண்டாலும் சம்பந்தனிடம் சில நிபந்தனைகள் விதித்தார் மாணிக்கா. கட்சிக்கான தலைமையகக் கட்டடம் கட்டுவதற்கு முன்னுரிமை அளிப்பது அதில் முதலாவது கோரிக்கையாகும்.

இரண்டாவது கோரிக்கை, கட்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகிக் கொள்வதாகவும் சம்பந்தனிடம் தெரிவித்தார் மாணிக்கா. அதன்படியே அந்தப் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

தொடர்ந்து இன்று மஇகா தலைமையகம் அமைந்திருக்கும் கட்டடத்தை உருவாக்க முழு மூச்சுடன் பாடுபட்டு, நாடெங்கிலும் அலைந்து நன்கொடைகள் திரட்டி, அந்தக் கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடித்தார் மாணிக்கா.

அதற்குப் பின்னணியில் சம்பந்தனின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

மஇகா தலைமையகக் கட்டடம்

ஆனால், 1970-ஆம் ஆண்டுகளில் சம்பந்தனுக்கும், மாணிக்காவுக்கும் இடையிலான தலைமைத்துவப் போராட்டம் தொடங்கியது. அதன் காரணமாக மஇகா தலைமையகக் கட்டடத்தின் திறப்பு விழாவும் தாமதமாகியது.

1973-இல் மாணிக்கா தேசியத் தலைவரான பின்னர்தான் மஇகா தலைமையகக் கட்டடம் திறப்பு விழா கண்டது. அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் மஇகா கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

துன் சம்பந்தன் அந்த மஇகா தலைமையகக் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க இன்னொரு நெருடல்.

மாணிக்காவின் அர்ப்பண உணர்வுடன் கூடிய உழைப்பை எடுத்துக் காட்டும் வண்ணம் இன்று அந்தக் கட்டடம் “மெனாரா டான்ஶ்ரீ மாணிக்கவாசகம்” என்ற பெயரைத் தாங்கி கம்பீரமாக தோற்றமளிக்கிறது.

அந்தக் கட்டடத்திற்கு “மெனாரா டான்ஶ்ரீ மாணிக்கவாசகம்” என்ற பெயரைச் சூட்டியவர் மாணிக்காவுக்குப் பின்னர் தேசியத் தலைவரான (துன்) சாமிவேலு.

-இரா.முத்தரசன்

அடுத்து பகுதி 4 (நிறைவு):

  • 1973-இல் மஇகா தேசியத் தலைவரான மாணிக்கா!
  • சம்பந்தனுக்கும் மாணிக்காவுக்கும் இடையிலான தலைமைத்துவ போட்டி
  • தேசியத் தலைவராக மாணிக்கா கொண்டு வந்த மாற்றங்கள்
  • மாணிக்காவின் சித்தாந்தங்கள் என்ன?

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal