Home நாடு மலாக்கா தேர்தல் முடிவுகள் காட்டும் அரசியல் நிலவரங்கள் என்ன?

மலாக்கா தேர்தல் முடிவுகள் காட்டும் அரசியல் நிலவரங்கள் என்ன?

670
0
SHARE
Ad

(நடந்து முடிந்திருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நமக்கு எடுத்துக் காட்டும் அரசியல் நிலவரங்கள் என்ன? தனது பார்வையில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

நவம்பர் 20-ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்குக் காட்டும் படிப்பினைகள் என்ன?

கட்சிகளின் அரசியல் வியூகங்கள் வெற்றியடைந்தனவா?

மலாக்கா வாக்காளர்கள் வெளிப்படுத்தியிருக்கும் அரசியல் மன உணர்வுகள் என்ன?

#TamilSchoolmychoice

மலாக்கா தேர்தல் முடிவுகளை 15-வது பொதுத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்ட அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியுமா?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

பெரிக்காத்தான் – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செல்வாக்கு குறையவில்லை

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தையும் மொஹிதின் யாசின் முகத்தையும் முன்னிருத்தித்தான் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. பிரச்சாரமும் செய்தது.

இன்னொரு புறத்தில் மொஹிதினுக்கு எதிராக அம்னோவினர் கடுமையான எதிர்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். குறிப்பாக நஜிப் மொஹிதினைத் தாக்கி “தோல்வியடைந்த அரசாங்கத்தைக் கொண்டவர்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

இத்தனைக்கும் நடுவிலும் பெரிக்காத்தான் கூட்டணி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அரசாங்கத்திற்கு தலைமை தாங்கவில்லை என்றாலும் – மொஹிதின் பிரதமர் இல்லை என்றாலும், பெரிக்காத்தான் – மொஹிதின் செல்வாக்கு எந்தவிதத்திலும் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பெரிக்காத்தானுக்கு விழுந்த வாக்குகளில் கணிசமான விழுக்காடு பாஸ் கட்சி வாக்குகளாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை.

ஆனால், இத்தனை அரசியல் பிரச்சனைகளுக்கு இடையிலும் பாஸ் கட்சியை இணைத்துக் கொண்டதும், அம்னோவையும், பாஸ் கட்சியையும் பிரித்து வைத்ததும்கூட மொஹிதினின் பாராட்டுக்குரிய அரசியல் வியூகம்.

மலாய் வாக்குகள் என்று வரும்போது அவை – ஒன்று அம்னோ சார்ந்த தேசிய முன்னணிக்கு சென்றன – அல்லது பெரிக்காத்தான் கூட்டணி பக்கம் சாய்ந்தன – பக்காத்தானுக்கு செல்லவில்லை – என்பது அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியப் படிப்பினை.

மலாய் வாக்குகளை பக்காத்தான்-பிகேஆர் பெற இயலவில்லை

அன்வார் மலாய் வாக்காளர்களிடையே செல்வாக்கை இழந்து விட்டாரா?

அல்லது அம்னோவினால் கூர் தீட்டப்படும், ஜசெகவுக்கு எதிரான மலாய் வாக்காளர்களின் எதிர்ப்புணர்வு இன்னும் முனை மழுங்காமல் வாக்குப்பெட்டிகளில் பிரதிபலிக்கின்றனவா?

காரணங்கள் எதுவாக இருந்தாலும், மலாக்கா மாநிலத்தைப் பொறுத்தவரையில் அன்வார் இப்ராகிமின் தலைமைத்துவமும், பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும்  புறக்கணிக்கப்பட்டிருப்பதையே மலாக்கா தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அதிலும், சனிக்கிழமையன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த முக்கியமான தருணத்தில் அன்வார் இப்ராகிம் இங்கிருந்து புறப்பட்டு சரவாக் சென்று அங்குள்ள தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார். மலாக்கா  தோல்வியை அவர் முன்கூட்டியே கணித்துத் தெரிந்து கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகத்தையே இந்த நகர்வு ஏற்படுத்தியது.

மலாக்கா தேர்தலையும், வாக்காளர்களையும் அவர் அலட்சியப்படுத்தியது போலவே அவரின் இந்த நகர்வு பார்க்கப்படுகின்றது.

மாறாக, அம்னோ-தேசிய முன்னணி தலைவர்கள் சாஹிட் ஹாமிடி, பிரதமர் இஸ்மாயில் சாப்ரி, நஜிப் துன் ரசாக், வீ கா சியோங் ஆகியோர் மலாக்காவிலேயே தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருந்தனர்.

தேசிய முன்னணி வெற்றி உறுதியானதும், அதிகாலையிலேயே தேசிய முன்னணி சார்பில் சுலைமான்  முகமட் அலி முதலமைச்சராகப் பதவியேற்க, அந்தப் பதவியேற்பு சடங்கிலும் மேற்கொண்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆட்சியைக் கவிழ்த்தவர்களுடன் இணைந்ததற்காக பக்காத்தானுக்கு வாக்காளர்கள் தந்த தண்டனையா?

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷெராட்டன் நகர்வு என்ற பெயரில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, மொஹிதின் பிரதமரானது முதல் அவர் மீதும் அவரின் சகாக்கள் மீதும் துரோகிகள், முதுகில் குத்தியவர்கள், ஆட்சியைத் திருடிக் கொண்டவர்கள், மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்ட அரசியல் பச்சோந்திகள் என்றெல்லாம் வசைமாரிகள் பொழியப்பட்டன.

அதற்காகவே, கட்சித் தாவுபவர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அன்வார் இப்ராகிமும், பக்காத்தான் கூட்டணியும் அறைகூவல் விடுத்தனர்.

பிரதமர் இஸ்மாயில் சாப்ரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் பக்காத்தான் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இவ்வளவுக்கும் பிறகு மலாக்காவில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியைக் கவிழ்த்ததும், அவர்களை அப்படியே அரவணைத்துப் பாராட்டிய அன்வார் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தார்.

அன்வாரின் இந்த முடிவு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் கட்சி மாறுபவர்களுக்க எதிராகப் பேசிக் கொண்டு அதற்காக சட்டத் திருத்தத்தையும் முன்மொழிந்து விட்டு;

இன்னொரு பக்கம் அப்படிக் கட்சி மாறியவர்களுக்கு ஆதரவு அளித்ததும் தங்களின் கட்சியில் சேர்த்துக் கொண்டு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததும், அன்வார்-பக்காத்தான் மீதான மதிப்பையும், நல்லெண்ணத்தையும் ஒரு சேர நொறுக்கித் தள்ளியது.

இந்த முடிவுக்காகவும் அன்வாரையும் பிகேஆர் கட்சியையும் மலாக்கா வாக்காளர்கள் தண்டித்திருக்கிறார்கள் எனலாம்!

அவ்வாறு கட்சி மாறிய அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியையே தழுவினார்கள் என்பதும்;

பிகேஆர் போட்டியிட்ட 11 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற இயலவில்லை; என்பதும்

அமானா, போட்டியிட்ட 9 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது, அதுவும் முன்னாள் பக்காத்தான் முதலமைச்சர்  அட்லி சஹாரியின் சொந்த செல்வாக்கினால் வெற்றி பெற்ற தொகுதி என்பதும்;

வாக்காளர்களின் மனோநிலையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

ஜசெகவுக்கும் பாதிப்பு

இந்தத் தாக்கம் ஜசெகவையும் பாதித்திருக்கிறது. கடந்த முறை மலாக்காவில் 7 தொகுதிகளை வெற்றி கொண்டது ஜசெக. இந்த முறை 8 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளை மட்டுமை கைப்பற்றியது.

மாறாக, ஜசெகவின் பரம வைரியான மசீச, தேசிய முன்னணியோடு இணைந்து 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

மஇகா காடெக் தொகுதியில் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது.

ஆக, கட்சிமாறிகளுக்கு ஆதரவு தந்த பக்காத்தானுக்கு வாக்காளர்கள் வாக்களிக்காமல் தண்டித்திருக்கிறார்கள் என்றே நாம் கருத வேண்டியுள்ளது.

நஜிப் நில விவகாரம் – தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

நஜிப்புக்கு 100 மில்லியன் மதிப்புடைய நிலம் வழங்கப்பட்ட செய்திகள் வாக்களிப்புக்கு சில தினங்கள் முன்பாக ஊடகங்களில் தெறிக்க விடப்பட்டன. இதனால், தேசிய முன்னணிக்கு எதிரான அலை உருவாகும் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கணித்தனர்.

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. வாக்களிப்புக்கு ஒரு நாள் முன்னதாக தனது நில விண்ணப்பத்தை மீட்டுக் கொண்டதாக நஜிப் அறிவித்தார். அந்த அறிவிப்பு கூட, வாக்காளர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இருந்தாலும், தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருப்பதை வைத்துப் பார்க்கும்போது நஜிப் நில விவகாரத்திற்காக தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களிக்க மலாக்கா வாக்காளர்கள் முன்வரவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பெரிக்காத்தானின் இறுதி நேர முதலமைச்சர் அறிவிப்பு – எடுபடவில்லை

மாஸ் எர்மியாத்தி சம்சுடின்

வாக்களிப்புக்கு 2 நாட்களுக்கு முன்பாக மாஸ் எர்மியாத்திதான் எங்களின் முதலமைச்சர் வேட்பாளர் என பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக அறிவித்தார் மொஹிதின் யாசின். அவரின் இந்த அறிவிப்பும் எடுபடவில்லை. வாக்காளர்களிடத்தில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

குறைந்த பட்சம் இந்த அறிவிப்பினால் மாஸ் எர்மியாத்தியாவது அவர் போட்டியிட்ட தஞ்சோங் பிடாரா தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தொகுதியிலும் அவர் தோல்வியடைந்தார்.

15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா, மலாக்கா தேர்தல் முடிவுகள்?

சரி! மலாக்கா தேர்தல் முடிவுகளை எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக எடுத்துக்கொள்ள முடியுமா?

இதே போன்ற முடிவுகளைத்தான் 15-வது பொதுத் தேர்தலும் நமக்கு வழங்குமா?

உறுதியாகக் கூறமுடியாது! காரணம், மலாக்கா தேர்தல் முடிவுகளை வைத்து இனி அரசியல் கட்சிகள் தங்களின் பொதுத் தேர்தல் வியூகங்களை மாற்றியமைக்கத் தொடங்கும்.

பாஸ் கட்சி, இனியும் பெரிக்காத்தான் கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறி! அந்தக் கூட்டணியிலிருந்து விலகி அம்னோவுடன் இணைந்து முவாபாக்காட் கூட்டணியை உயிர்ப்பிக்க பாஸ் முயற்சி செய்யலாம்.

இனியும் அந்த விளையாட்டுக்கு மீண்டும் அம்னோ வருமா? என்பது இன்னொரு நியாயமான கேள்வி?

மலாக்காவில் தனித்து நின்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைச் சுவைத்திருக்கும் தேசிய முன்னணிக்கும்-அம்னோவுக்கும் இனியும் பிரச்சனைக்குரிய அரசியல் மூட்டையான பாஸ் தேவைப்படாது என்பதே மலாக்கா முடிவுகள் காட்டும் இன்னொரு படிப்பினை.

புத்திசாலி அம்னோ அந்தப் பாடத்தை இந்நேரம் படித்துக் கொண்டிருக்கும்.

பாஸ் விலகிக்கொண்டால் பெரிக்காத்தான் அதே பலத்துடன் திகழுமா? பெர்சாத்து மட்டும் இருந்து கொண்டு இதே போன்ற ஆதரவை வாக்காளர்கள் மத்தியில் பெற முடியுமா?

ஆக, 15-வது பொதுத் தேர்தலில் மலாக்கா முடிவுகளின் அடிப்படையில் கட்சிகளின் அரசியல் வியூகங்களும் மாறும்.

அதன் அடிப்படையில்தான் முடிவுகளும் அமையும்.

முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, மேற்கு மலேசியாவில் 15-வது பொதுத் தேர்தலில் இழுபறி நிலையே நீடிக்கும்.

15-வது பொதுத் தேர்தலில் சபா, சரவாக் மாநிலங்களில் அந்தக் கட்சிகள் எத்தனைத் தொகுதிகளைப் பிடிக்கப் போகின்றன என்பதுதான் முக்கியம்.

அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கூட்டணிப் பக்கம் சாய்வார்கள் – என்பதைப் பொறுத்துத்தான் அடுத்த மத்திய அரசாங்க ஆட்சியை அமைப்பது யார் என்பது நிர்ணயமாகும்.

இன்றைக்கு இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான ஆட்சி சரவாக் ஜிபிஎஸ் கூட்டணியின் தயவினால்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றது என்பதே இதற்கான சிறந்த உதாரணம்.

– இரா.முத்தரசன்