கூச்சிங் : சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 30) 10 அமைச்சர்களையும், 26 துணையமைச்சர்களையும் கொண்ட தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
3 துணை முதலமைச்சர்களையும் அபாங் ஜோஹாரி நியமித்திருக்கிறார். டக்ளஸ் உங்கா எம்பாஸ், அவாங் தெங்கா அலி ஹாசான், டாக்டர் சிம் குய் ஹியான் ஆகியோரே அந்த 3 துணை முதலமைச்சர்களாவர்.
அபாங் ஜோஹாரி, நிதி, புதிய பொருளாதாரம், இயற்கை வளங்கள், நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளை நிர்வகிப்பார்.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற சரவாக்கின் 12-வது சட்டமன்றத் தேர்தலில் அபாங் ஜோஹாரி தலைமையிலான ஜிபிஎஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சரவாக் மாநிலத்தை உயர்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக 2030-ஆம் ஆண்டுக்குள் உருமாற்றம் செய்யும் இலக்கை புதிய அமைச்சரவை கொண்டிருக்கும் எனவும் அபாங் ஜோஹாரி தெரிவித்தார்.
சரவாக் தேர்தலில் மொத்தமுள்ள 82 தொகுதிகளில் 76 தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி கைப்பற்றியது. பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து சரவாக் கட்சி இவற்றில் 47 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தக் கட்சியின் தலைவராக அபாங் ஜோஹாரி பதவி வகிக்கிறார்.
எஸ்யுபிபி கட்சி 13 தொகுதிகளையும், பிஆர்எஸ் 11 தொகுதிகளையும் பிடிபி 5 தொகுதிகளையும் கைப்பற்றின.