Home நாடு அசாம் பாக்கி ஊழல் புகார்களினால் பதவி இழப்பாரா?

அசாம் பாக்கி ஊழல் புகார்களினால் பதவி இழப்பாரா?

801
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : வேலையே பயிரை மேய்ந்த கதையாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியே தற்போது ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டுள்ளார்.

மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றில் ஏறத்தாழ 2 மில்லியன் பங்குகளை அசாம் பாக்கி வைத்திருக்கிறார். எப்படி வந்தது அவருக்கு இந்தப் பணம்? ஓர் அரசாங்க ஊழியரான அவர் இந்தப் பங்குகள் வைத்திருப்பதை அரசாங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறாரா?

இந்தப் பங்குகள் யார் மூலமாக அவர் பெற்றார்? அவரின் வருமானம் மூலம் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டி அவரால் பங்குகளை வாங்க முடியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர், பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

#TamilSchoolmychoice

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை, ஊழல் தடுப்பு மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வந்த பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரென்ஸ் கோமஸ், அசாம் பாக்கி மீதான புகார்கள் தொடர்பில் தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பகிரங்கமான செய்திகள் வந்திருப்பதால் அமைச்சரவையும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (டிசம்பர் 29) இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக அசாம் பாக்கி மீதான புகார்களை நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்று விசாரிக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.சிவராசா (சுங்கை பூலோ), மரியா சின் அப்துல்லா (பெட்டாலிங் ஜெயா), சிம் ட்சி ட்சின் (பாயான் பாரு), ஹாசான் அப்துல் காரிம் (பாசீர் கூடாங்) பாஹ்மி பாட்சில் (லெம்பா பந்தாய்), சைட் இப்ராகிம் சைட் நோ (லெடாங்) ஆகிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.