கோபன்ஹேகன் (டென்மார்க்) – இங்குள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மூவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் உள்ள பேரங்காடி (ஷாப்பிங் சென்டர்) ஃபீல்ட்ஸின் உள்ளே பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சமூக ஊடகக் காட்சிகளில் மக்கள் பேரங்காடி நடைபாதைகளின் வழியாக ஓடுவதையும், சம்பவ இடத்தில் ஆயுதம் ஏந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளையும் பார்க்க முடிந்தது.
இன்று திங்கட்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், கோபன்ஹேகன் காவல்துறைத் தலைவர் சோரன் தாமஸ்சென், பாதிக்கப்பட்டவர்களில் “40 வயதுடைய ஒருவரும் இரண்டு இளைஞர்களும் அடங்குவர்” என்றார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு டேனிஷ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார், அவர்தான் தற்போதைக்கு ஒரே சந்தேக நபராக உள்ளார்.
“கைது செய்யப்பட்ட 22 வயதான சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர். அவர் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் சென்றார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று அவர் கூறினார். “சந்தேக நபர் மற்றவர்களுடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று விசாரணையாளர்கள் நம்புகிறார்கள்” என்றும் ஆனால் அவர்கள் உறுதியாக நம்பும் வரை அவர்கள் அதை நிராகரிக்க மாட்டேன்” என சோரன் தாமஸ்சென் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் பயங்கரவாதத் தொடர்புடையதாகவும் இருக்கலாம் என்ற சாத்தியத்தையும் விசாரணை அதிகாரிகள் மறுக்கவில்லை.
துப்பாக்கிச் சூடு பற்றிய முதல் அவசர அழைப்பைப் பெற்ற பதின்மூன்று நிமிடங்களில் சந்தேக நபரை காவல் துறையினர் கைது செய்தனர் எனவும் தாமஸ்சென் கூறினார்.