Home உலகம் ஈரோ 2020 : இங்கிலாந்து 2 – டென்மார்க் 1; கூடுதல் நேரத்தில் கோல் போட்ட...

ஈரோ 2020 : இங்கிலாந்து 2 – டென்மார்க் 1; கூடுதல் நேரத்தில் கோல் போட்ட இங்கிலாந்து!

1235
0
SHARE
Ad

இலண்டன் : இன்று வியாழக்கிழமை (ஜூலை 8) அதிகாலை 3.00 மணிக்கு இலண்டனில் நடைபெற்ற அரை இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் டென்மார்கைத் தோற்கடித்து இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

காற்பந்து இரசிகர்கள் என்பதைவிட வெறியர்களாகத் திகழும் இங்கிலாந்து இரசிகர்கள் இந்த வெற்றியைத் தொடர்ந்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே தலா ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.

#TamilSchoolmychoice

ஆட்டத்தின் முதல் கோலை டென்மார்க் அடித்து 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணிக்கு வந்தபோது, அரங்கில் குழுமியிருந்த இங்கிலாந்து இரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

எனினும் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்து ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது. இங்கிலாந்து இரசிகர்களும் மீண்டும் உற்சாகத்தில் திளைத்தனர்.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரண்டு குழுக்களுமே கோல் அடிக்க முடியாமல் திணறின.

இதைத் தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் இங்கிலாந்து குழுவின் தலைவர் (கேப்டன்) ஹாரி கேன் ஒரு கோல் போட்டு இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

புதன்கிழமை (ஜூலை 7) அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினைத் தோற்கடித்து இத்தாலி இறுதி ஆட்டத்திற்குத் தேர்வானது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் இத்தாலியும் மோதி ஐரோப்பியக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதிச் சுற்றுக்கு பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உக்ரேன் ஆகிய 8 நாடுகள் தேர்வாகின.

இந்த 8 குழுக்களுக்கிடையிலான ஆட்டங்கள் நடைபெற்று இதில் டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகள் அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகின.

அரை இறுதி ஆட்டங்களைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்தும், இத்தாலியும் இறுதிச் சுற்றுக்குச் செல்கின்றன.