Home நாடு மொகிதின் யாசின், துணைப் பிரதமர் பதவி கேட்டதற்காகக் கண்டனம்

மொகிதின் யாசின், துணைப் பிரதமர் பதவி கேட்டதற்காகக் கண்டனம்

672
0
SHARE
Ad

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் பதவி உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைச் சந்தித்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, நாட்டில் விலைவாசிகள் உயர்ந்து மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் துணைப் பிரதமர் பதவி கேட்க பிரதமரைச் சந்தித்ததற்காக பல முனைகளில் இருந்தும் மொகிதின் மீது கண்டனக் கணைகள் பாய்ந்திருக்கின்றன.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான முந்தைய ஒப்பந்தத்தை பரிசீலிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக பெர்சாத்து கட்சியின் தலைவராகவும் இருக்கும் மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

“சில நாட்களுக்கு முன்பு நான் பிரதமரை சந்தித்தேன், அங்கு காலியிடங்களை நிரப்புவது மட்டுமல்லாமல் புதிய நியமனங்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தில் நியமனங்கள் உட்பட பல முக்கியமான பிரச்சினைகளை நான் எழுப்பினேன். ஒரு துணைப் பிரதமர் பதவி, அமைச்சர்கள் மற்றும் அரசாங்க சார்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்டவர்கள் நியமனம் பற்றி மட்டுமே நாங்கள் பேசினோம். ஒப்புக் கொள்ளப்பட்ட விவகாரங்கள் தவிர கூடுதலாக எதையும் கேட்கவில்லை,” என்று அவர் கூறினார்.

மே 26 அன்று பெர்சாத்துவில் இருந்து விலகி, பார்ட்டி பங்சா மலேசியாவில் இணைந்த தோட்டத் தொழில்கள் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின் நிலை குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

15-வது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தைப் பயன்படுத்த பெர்சாத்து மற்றும் பாஸ் முடிவு செய்துள்ளதாகவும் மொகிதின் கூறினார்.

“இந்த விஷயத்தை பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஒப்புக்கொண்டுள்ளார், பாஸ் தலைமை இதை உறுதிப்படுத்த முடியும். அதுதான் நான் பெற்ற முடிவு, அந்த முடிவு அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும், இடப் பங்கீடு குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை,” என்றார்.

பல கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தை எச்சரிக்கையுடன் கையாள்வதாகவும் அவர் கூறினார்.