கொழும்பு : இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகுவேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு செய்யாமல் மாலைத் தீவுக்குத் தப்பி ஓடிய கோத்தாபாய ராஜபக்சே தற்போது அங்கிருந்து சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.
எனினும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று உடனடியாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இது கோத்தாபாயவின் தனிப்பட்ட வருகை என்றும், அவர் சிங்கப்பூரில் அரசியல் அடைக்கலம் நாடி கோரிக்கை எதனையும் விடுக்கவில்லை என்றும் தெரிவித்தது. சிங்கப்பூர் அவருக்கு அரசியல் புகலிடம் தரவில்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
மாலைத் தீவுக்குத் தப்பி ஓடிய கோத்தாபாய
கொழும்புவிலிருந்து இராணுவ விமானம் ஒன்றின் மூலமாக கோத்தபாய நாட்டை விட்டு தப்பி ஓடி, அருகிலுள்ள மாலைத் தீவு நாட்டில் அரசியல் அடைக்கலம் புகுந்தார்.
73 வயதான கோத்தாபாய ராஜபக்சே மாலைத் தீவில் அரசியல் அடைக்கலம் கோருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்தார்.
சிங்கப்பூரிலிருந்து அவர் புறப்பட்டுச் சென்று சவுதி அரேபியா செல்வார் என்றும் சவுதி அரேபியா அவருக்கு அரசியல் புகலிடம் தர முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.