இலண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கானப் போட்டியில் முன்னணியில் உள்ளவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சுனாக் முதல் சுற்றில் அதிக வாக்குகள் (88) பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், இங்கிலாந்து பிரதமராகவும் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து அவரின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான முதற் சுற்றில் நேற்று சில வேட்பாளர்கள் வெளியேறி தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது.
நாதிம் ஜஹாவி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெரமி ஹன்ட் ஆகியோர் குறைந்தபட்சம் 30 எம்.பி.க்களின் வாக்குகளை ஈர்க்க முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறினர்.
இதற்கிடையில், மற்றொரு உயர்மட்ட போட்டியாளரான வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் 50 வாக்குகளைப் பெற்றார்.
கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் முன், இரண்டு இறுதி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்களிப்பார்கள்.
அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் செப்டம்பர் 5 ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகவும், பிரிட்டிஷ் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அடுத்த பிரிட்டன் பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பரபரப்பு அனைத்துலக அளவில் நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக்குக்கு கன்சர்வேடிவ் கட்சியில் ஆதரவு பெருகி வருகிறது.
முதலில் 11 வேட்பாளர்கள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து பிரதமராக ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த எண்ணிக்கை பின்னர் 8-ஆகக் குறைந்து தற்போது 6-ஆகக் குறைந்துள்ளது.
அவர்களில் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனத்தின் அதிபரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் முன்னணி வகிக்கிறார்.
ரிஷியின் குடும்ப சொத்து மதிப்பு 730 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (1 பவுண்ட் = 5.27 மலேசிய ரிங்கிட்) எனக் கணக்கிடப்படுகிறது.
பிரிட்டனின் முதல் இந்தியப் பிரதமராக ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைப்பாரா என உலக இந்திய வம்சாவளியினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.