கோலாலம்பூர் : கோப்பியோ (Global Organisation of People of Indian Origin – GOPIO) எனப்படும் அனைத்துலக இந்திய வம்சாவளியினருக்கான அமைப்பிலும், அதன் மலேசியக் கிளையிலும் நீண்டகாலமாக தீவிரமாக ஈடுபட்டு, பல்வேறு பொறுப்புகளையும் அந்த இயக்கங்களில் வகித்த செல்வராஜூ சுந்தரம் இன்று புதன்கிழமை காலமானார்.
73-வயதான அவர் திடீர் மாரடைப்பினால் காலமானார். மஇகா தொடங்கிய முதலீட்டு நிறுவனமான எம்ஐசி யூனிட் டிரஸ்ட் (MIC Unit Trusts) என்ற நிறுவனத்தில் துணை நிர்வாகியாகவும் பின்னர் நிர்வாகியாகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
அதன் பின்னர் கோப்பியோ அமைப்பின் உருவாக்கத்திலும் அதன் மலேசியக் கிளை அமைப்பிலும் அவர் பெரும் பங்காற்றினார். போர்ட் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தோற்றுநராகவும் அவர் விளங்கினார்.
இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவரான செல்வராஜூ, மலேசிய இந்தியப் பட்டதாரிகள் சங்கத்தையும் (MAIUG) தோற்றுவித்து, அதன் தலைவராகவும் பல்லாண்டுகள் சேவையாற்றியிருக்கிறார்.
மறைந்த செல்வராஜூவின் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை (ஜூலை 14-ஆம் தேதி) பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:
No: 684, Jalan Pala, Pandamaran,
42000 Port Klang,
Selangor Darul Ehsan
இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் சிம்பாங் லீமா மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்படும்.