Home நாடு பெஞ்சானா : ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு மனித வள அமைச்சு ஒத்துழைக்கும்

பெஞ்சானா : ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு மனித வள அமைச்சு ஒத்துழைக்கும்

573
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பெஞ்சானா (Penjana) என்னும் கைத்திறன் பயிற்சிகளுக்கான நிதி மையம் மீது எழுந்திருக்கும் ஊழல் புகார்களைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு, மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) மற்றும் தொழிலாளர் சமூக பாதுகாப்பு அமைப்பு (SOCSO) ஆகியவற்றின் முயற்சிகளை முழுமையாக ஆதரிப்பதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 15) விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் தமது அமைச்சு எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது என்றும் சரவணன் அறிவித்தார்.

ஊழல் புகார்களின் தொடர்பில் 37 பேரைக் கைது செய்துள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், வேலையில்லாத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், வேலை தேடுபவர்களுக்குத் தகுந்த வேலை தேடுவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முயற்சியாக முதலாளிகளுக்கு உருவாக்கப்பட்ட வேலை ஊக்குவிப்பு நிதி (கேரியர் ஜெனரேட்டர் ஃபண்ட்) பெஞ்சானா என்பதாகும்.

இந்தத் திட்டத்தில் இருந்து நிதி பெற போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சரவணன் தெரிவித்தார்.

மலேசிய ஊழல்-எதிர்ப்பு ஆணையத்தின் (MACC)  கூற்றுப்படி, பெஞ்சானா நிதியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தில் விசாரணையில் உதவ மொத்தம் 37 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட நிதியின் அளவு ஏறத்தாழ 100 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில், பெஞ்சானாவுக்கு வழங்கப்படும் நிதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க சோக்சோ எனப்படும் தொழிலாளர் பாதுகாப்பு நிதி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

மலேசியாவில் தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திற்காக நிதி ஆதாரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதால், எந்தவொரு  தவறான உரிமை கோரல்களையும், ஆவண சமர்ப்பிகளையும் செய்ய வேண்டாம் என்று முதலாளிகள் மற்றும் பயிற்சி வழங்குநர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் சரவணன் தெரிவித்தார்.

தவறான உரிமைகோரல்கள் மற்றும் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய எந்தவொரு தரப்பினருடனும் மனித வள அமைச்சு எந்த வகையிலும் சமரசம் செய்யாது என்றும் சரவணன் வலியுறுத்தினார்.