கோலாலம்பூர் : பிகேஆர், கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து மாநிலத் தலைவர்களை நியமித்துள்ளது. சிலாங்கூர் மாநிலத் தலைவராக இருக்கும் அமிருடின் ஷாரி பஹாங் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக் நஸ்மி கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார்.
நேற்றிரவு, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், இந்த நியமனங்களை அறிவித்தார்.
பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி கூட்டரசுப் பிரதேசங்கள், ஜோகூர் மாநிலத்திற்கும் தலைமை தாங்குவார் என்றும், மற்றொரு உதவித் தலைவர் அமினுதீன் ஹருன் நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்களுக்கு தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சங்கர் ரசம் சபா தலைவராகவும், ரோலண்ட் எங்கன் சரவாக் தலைவராகவும் ஏற்கனவே நியமிக்கப்பட்டனர்.
பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்களுக்கான பிகேஆர் தலைவர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பொதுவாக, எந்த பிகேஆர் உறுப்பினரும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்குத் தலைமை தாங்க மாட்டார்கள். எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முக்கியத் தலைவர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு பிகேஆர் தலைமைத்துவம் நியமித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
அண்மையில் பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபிசி ரம்லி கூட்டரசுப் பிரதேச தொடர்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சிலாங்கூர் மாநிலத் தொடர்புக் குழுத் தலைவராக மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.