Home Photo News 15-வது பொதுத் தேர்தல் நவம்பரிலா? இறுதி முடிவு மாமன்னரின் கரங்களில்!

15-வது பொதுத் தேர்தல் நவம்பரிலா? இறுதி முடிவு மாமன்னரின் கரங்களில்!

516
0
SHARE
Ad
மாமன்னருடன் பிரதமர் – கோப்புப் படம்

(நவம்பரில் பொதுத் தேர்தல் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தன்னிச்சையாகவோ – அமைச்சரவை ஒப்புதலுடனோ – 15-வது பொதுத் தேர்தலை நிர்ணயிக்க முடியுமா? இந்த விவகாரத்தில் மாமன்னரின் அதிகாரங்கள் என்ன? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

அக்டோபர் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023 ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படும் என விடுக்கப்பட்ட அறிவிப்பு  மாற்றப்பட்டு தற்போது அக்டோபர் 7ஆம் தேதி, முன்கூட்டியே வரவு– செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து 15ஆவது பொதுத் தேர்தல் இந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே நடத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டுதான் நவம்பர் மாதத்தில் நாட்டின் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 1990-ஆம் ஆண்டிலும் அக்டோபர் மாதத்திலேயே நாட்டின் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த இரு கால கட்டங்களிலும் அப்போது பிரதமராக இருந்தவர் துன் மகாதீர் முகமட்.

#TamilSchoolmychoice

1990-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், 2000-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் –  அதன் காரணமாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கருதிக் கொண்டிருந்த நிலையில் -– திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்தார் மகாதீர்.

அன்வார் இப்ராகிம் கைது நடவடிக்கையால் ஏற்பட்ட எதிர்ப் பிரச்சாரங்களை முறியடிக்க அத்தகைய அதிரடி முடிவை அப்போது மகாதீர் எடுத்தார்.

இந்த முறையும் அதேபோன்று அக்டோபர் 7ஆம் தேதி வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அதில் மக்களுக்குப் பயனான அம்சங்கள் புகுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அம்சங்களெல்லாம்  அமல்படுத்தப்பட வேண்டுமானால் ‘தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள்’ என்ற பிரச்சார முழக்கத்தோடு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

இதன் மூலம் அம்னோ கொடுத்துவரும்  நெருக்குதல்களுக்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி பணிந்துவிட்டார் என்று கருதத் தோன்றுகிறது.

மாமன்னரின் முன் அனுமதி தேவை

ஆனாலும், ஒரு முக்கிய அம்சத்தை பலர் மறந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. தவணைக் காலம் முடிவதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அதற்கான முன் அனுமதியை மாமன்னர் வழங்க வேண்டும்.

பொதுவாக எல்லா விவகாரங்களிலும் மாமன்னர், பிரதமரின் அல்லது அவரின் அமைச்சரவையின் முடிவுகளுக்கேற்ப செயல்பட வேண்டும் என மலேசிய அரசியலமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.

ஆனால், சில விவகாரங்களில் தன்னிச்சையாகவும் சுயமாகவும் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரத்தை மாமன்னருக்கு அதே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தவணைக் காலம் முடிவடைவதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு பிரதமர் பரிந்துரைத்தால் அதை நிராகரிக்கும் உரிமை மாமன்னருக்கு உண்டு.

ஆனால், கடந்த காலங்களில் – 80-90ஆம் ஆண்டுகளில் எப்போதுமே நாடாளுமன்றத் தவணை காலம்  முடிவதற்கு ஒரு வருடம் இருக்கும்போதே அப்போதைய பிரதமர்கள் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பரிந்துரையை செய்திருக்கிறார்கள்.

மாமன்னரும்  அதனை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அனுமதியை வழங்கியிருக்கிறார். ஆனால்,  கடந்த சில வருடங்களாக நாட்டில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களால் – கட்சி மாறிகளின் அரசியல் விளையாட்டால் – மாமன்னரின் அதிகாரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு – வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

அதில் ஒன்றுதான் நாடாளுமன்றத் தவணை முடிவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லை என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க மாமன்னரைச் சார்ந்தது என்பது.

மாமன்னருக்கான இந்த அதிகாரம் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 40ஆவது விதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே,  அம்னோவின் நெருக்குதல்களுக்கு அடிபணிந்து இஸ்மாயில் சப்ரி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பரிந்துரையை மாமன்னர் முன் வைத்தால் அதனை நிராகரிக்கும்  அதிகாரம் மாமன்னருக்கு உண்டு.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக இஸ்மாயில் சப்ரி அறிவித்தால் அதைத் தொடர்ந்து அந்தப் பரிந்துரை மீது முடிவெடுப்பதற்கு மாமன்னர் மலாய் ஆட்சியாளர்களின்  கூட்டத்தைக் கூட்டக் கூடும். மற்ற ஆட்சியாளர்களின் ஆலோசனையைப் பெற்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லையா என்ற முடிவை மாமன்னர் எடுப்பார்.

அம்னோவை பகைத்துக் கொள்ள இஸ்மாயில் சப்ரி விரும்பவில்லையா?

நஜிப் துன் ரசாக்கின்  சிறைத்தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இப்போதைக்கு அம்னோ அரசியலில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடப்புப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி.

அம்னோ தலைவர் ஸாஹிட் ஹாமிடி மீதும் அடுக்கடுக்கான  குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இஸ்மாயில் சப்ரிக்கு இருக்கும் ஒரே அரசியல் போட்டியாளர் அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹாசான் தான்.

பிரதமராக இருப்பதால் கட்சியில் மிகப் பெரிய செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் இஸ்மாயில் சப்ரி செலுத்த முடியும். அந்த வகையில் அவர் முகமட் ஹாசானை விட கூடுதல் அரசியல் பலத்துடன் திகழ்கிறார்.

இந்நிலையில் அம்னோவில் தனது செல்வாக்கை இழக்க இஸ்மாயில் சப்ரி விரும்பமாட்டார். அதனால்தான் பெரும்பாலான அம்னோ தலைவர்களின் விருப்பத்தை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைக்க அவர் முன்வந்திருக்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அம்னோவின் அடுத்த கட்சித் தேர்தல் நடைபெறும்போது கண்டிப்பாக இஸ்மாயில் சப்ரி தேசியத்தலைவர் பதவிக்குப் போட்டியில் இறங்குவார்.

அதற்குள்ளாக சாஹிட் ஹாமிடி மீதான குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் – அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டால் – அதைத் தொடர்ந்து அம்னோவின் அடுத்த கட்ட தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் போட்டியில் முகமட் ஹாசான்– இஸ்மாயில் சப்ரி இருவர் மட்டுமே முன்னணியில் இருப்பர்.

வேறு சிலரும் இந்தப் போட்டியில் குதிக்கலாம் என்றாலும் நடப்பு யதார்த்த அரசியல் களத்தில் இவர்கள் இருவர் மட்டுமே அம்னோ தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் போட்டியில் முன்னணி வகிக்கின்றனர். எனவேதான் அத்தகைய சிறந்த வாய்ப்பை நழுவ விடாமல் அம்னோவின்  அழுத்தத்திற்கு இஸ்மாயில் அடி பணிந்துவிட்டார் என்றே கருதத் தோன்றுகிறது.

அதன் காரணமாகவே வரவு –செலவுத் திட்டமும் முன்கூட்டியே சமர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு முன்கூட்டியே சமர்ப்பிக்கப்படுவதற்கு வேறு எந்த வலுவான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை. சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனாய்டியும் வரவு– செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கோடி காட்டியிருந்தார்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அக்டோபரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

எனினும், நாம் மேலே குறிப்பிட்டது போல், இறுதி முடிவு மாமன்னரின் கரங்களில்!

-இரா.முத்தரசன்