புத்ரா ஜெயா : பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் ராஜினாமா செய்துள்ளார்.
செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 30) அசாலினா தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 2021 இல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு ஆலோசகராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பால், ஜோகூரின் பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினரான அசாலினா நியமிக்கப்பட்டார்.
அம்னோ உச்ச மன்ற உறுப்பினராகவும் இருக்கும் அசாலினா, தற்போதைய சட்டத்துறைத் தலைவரான (அட்டர்னி ஜெனரல்) ஏன் அரசாங்கத்திற்கு நட்பாக இல்லை என்று சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.
உலகின் பிற பகுதிகளில், ஒரு பிரதமர் தனது சொந்த ஆதரவாளரை சட்டத் துறைத் தலைவராக நியமிப்பார் என்று அவர் கூறியிருந்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர்கள் குழுவை மாற்றிய பின், வழக்கை ஒத்திவைக்கும் முயற்சியை பெடரல் நீதிமன்றம் நிராகரித்தது ஏன் என்றும் அசாலினா கேள்வி எழுப்பியிருந்தார்.