துன் சாமிவேலுவின் மறைவை முன்னிட்டு கணினி நிபுணர் முத்து நெடுமாறன் துன் அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இரங்கல் செய்தி
துன் சாமிவேலு அப்பாவின் (கவிஞர் முரசு நெடுமாறன்) நெருங்கிய நண்பர். கோலாலம்பூர், சிங்கப்பூர், சென்னை போன்ற ஊர்களில் நடந்த தமிழ் நிகழ்ச்சிகளில் அடிக்கடி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் மின்னுட்பக் கணிஞனாக மட்டுமல்லாமல், நாடகக் கலைஞனாகவும் என்னை அறிந்தவர் அவர். பார்க்கும்போதெல்லாம் “நலமா இருக்கிறீங்களா?”, “அப்பா எப்படி இருக்கிறாரு?” என்று அன்போடு கேட்பார்.
கோலாலம்பூரில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டினை மலேசிய இந்திய காங்கிரசின் ஆதரவோடு உத்தமம் அமைப்பு ஏற்று நடத்தியது. அப்போது உத்தமத்தின் துணைத்தலைவராக இருந்தேன். மாநாட்டினை ஏற்று நடத்த உத்தமம் நிருவாகக் குழு எனக்குப் பொறுப்புக் கொடுத்தது. அப்போதுதான் சாமிவேலு அவர்களோடு நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன்.
அவருடைய நிருவாக முறைக்கும் அனைத்துலக வணிக நிறுவனங்களில் பணியாற்றியதன் வழி நான் பெற்ற முறைக்கும் பெரிய வேறுபாடு இருந்தது. அரசியல் சூழலுக்கேற்ப மாறிவரும் தன்மையைக் கொண்டது. அதனை அமைதியாகவும் சில வேளைகளில் விறுவிறுப்பாகவும் அவர் கையாண்டதைப் பார்த்து வியந்தேன்.
மாநாட்டில் அவர் ஆற்றவேண்டிய தொடக்க உரையை நண்பர் ராஜ் குமாரும் நானும் பல மணி நேரம் ம.இ.கா. தலைமையகத்தில் அவருடன் அமர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி முடித்தது நன்றாக நினைவிருக்கிறது.
அப்போது நடந்த உரையாடல்கள் அவர் நெஞ்சில் இருந்து வந்தவை. தமிழின்பால் அவருக்கு இருந்த ஆழ்ந்த பற்றை அன்று வெளிப்படையாகவும் மிகத்தெளிவாகவும் காண முடிந்தது.
அந்த மாநாட்டிற்குப்பின், அவருக்கு ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த ஐயங்களை, அவர் எந்த நாட்டில் இருந்தாலும் நேரடியாக செல்பேசியில் அழைத்துப் பேசுவார். தனிப்பட்ட முறையில், அவர் மிக அன்பான மனிதர். அவரின் தமிழ்ப் பற்று போற்றுதற்குரியது. அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க அவரின் புகழ்!