சென்னை : பிரபல நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை நீண்ட காலமாகக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர் கர்ப்பமாக இருந்தது இதுவரையில் ஊடகங்களில் கூட வெளிவரவில்லை. இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 9-ஆம் தேதி நயன்தாராவுக்கும் தனக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியான செய்தியை விக்னேஷ் சிவன் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதோடு, அவர்கள் இருவரும் குழந்தைகளோடு இணைந்திருக்கும் படங்களையும் பதிவிட்டார்.
#TamilSchoolmychoice
அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றிருப்பது சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.