Home Photo News மலாய் வாக்குகள் பிளவினால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?

மலாய் வாக்குகள் பிளவினால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?

517
0
SHARE
Ad
முவாபாக்காட் நேஷனல் கூட்டணியைச் சாத்தியமாக்க அம்னோ-பாஸ் தலைவர்களிடையே நடைபெற்ற இறுதி முயற்சி பேச்சு வார்த்தையின்போது…

(பெரிக்காத்தானுடன் இணைந்திருக்க பாஸ் முடிவு செய்திருக்கிறது. போர்க்களத்தின் எல்லைக் கோடுகள் இப்போது தெளிவாக வகுக்கப்பட்டு விட்டன. மலாய் வாக்குகள் 4 பிரிவுகளாகப் பிளவுபடப் போவதும் உறுதியாகிவிட்டது. இதனால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில், பெர்சாத்து கட்சியுடன் இணைந்திருக்கும் பாஸ் கட்சியைத் தன் பக்கம் இழுக்க, அம்னோ எத்தனையோ வழிகளில் நூண்டில் போட்டு பார்த்தது. ஆனால் பாஸ் சிக்கவில்லை. அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி பாஸ் தலைவர் ஹாடி அவாங்கை நேரடியாகச் சந்தித்துப் பேசிய பின்னரும் இரு தரப்புகளுக்கும் இடையில் இணக்கம் காணப்படவில்லை.

வியாழக்கிழமை (அக்டோபர் 13) பாஸ் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தின் முடிவின்படி பெரிக்காத்தான் கூட்டணியிலேயே தொடர பாஸ் முடிவு செய்திருக்கிறது. இதனால் 15-வது பொதுத் தேர்தல் போர்க்களத்திற்கான எல்லைக் கோடுகள் தெளிவாக வகுக்கப்பட்டு விட்டன.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் முடிவின் மூலம் மலாய் வாக்குகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிளவுபடப் போவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இப்போது எழுந்திருக்கும் கேள்வி, இந்தப் பிளவுகளினால் பலன் அடையப் போவது- தேர்தலில் சாதகங்களை அடையப் போவது பக்காத்தான் ஹாரப்பானா? அல்லது தேசிய முன்னணியா என்பதுதான்?

பெரிக்காத்தானுக்கு அரசியல் சித்தாந்த வெற்றி – ஆனால் தொகுதிகளை வெல்ல முடியுமா?

பாஸ் கட்சியைத் தங்களின் பக்கம் தக்க வைத்துக் கொண்டிருப்பதன் மூலம் அரசியல் சித்தாந்த ரீதியாக முஹிடின் யாசினும், பெரிக்காத்தானும் நேஷனலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். பாஸ் கட்சி ஒரு வலுவான அரசியல் தோழமை என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

பாஸ் கட்சியைப் பொறுத்தவரை, யாருடன் இணைந்திருந்தாலும் அவர்களுக்கே உரிய சில தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள். அதே போல இந்த முறையும், அம்னோவுடன் கூட்டணி வைத்தால் கிடைக்கக் கூடிய தொகுதிகளை விட அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை பாஸ், கிளந்தான் திரெங்கானு, கெடா ஆகிய மாநிலங்களில் பெரிக்காத்தான் கூட்டணி மூலம் பெற்றுவிடும்.

47 நாடாளுமன்றத் தொகுதிகளை பாஸ் கட்சிக்கு வழங்க பெரிக்காத்தான் கூட்டணி முன்வந்திருப்பதாக அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டுசுக்கி அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனவே, பெரிக்காத்தானில் இணைந்திருப்பதன் மூலம் அதிக சாதகம் பாஸ் கட்சிக்குத்தான்!

15-வது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தீபகற்ப மலேசியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளில் 4 முக்கிய மலாய் கட்சிகள் அல்லது கூட்டணிகள் போட்டியிடும்.

தேசிய முன்னணி, பக்காத்தான் ஹாரப்பான், பெரிக்காத்தான் நேஷனல், துன் மகாதீரின் பெஜூவாங் கட்சி தலைமை வகிக்கும் கெராக்கான் தானா ஆயர் கூட்டணி ஆகியவையே அந்த நான்கு  கூட்டணிகளாகும். இதில் ஜிடிஏ என்னும் கெராக்கான் தானா ஆயர் கூட்டணி இன்னும் சங்கப் பதிவகத்தில் பதிவாகாத காரணத்தால், அந்தக் கூட்டணிக் கட்சிகள் பெஜூவாங் சின்னத்திலேயே போட்டியிடும் என துன் மகாதீர் அறிவித்திருக்கிறார்.

பெரும்பாலான தொகுதிகளில் தேசிய முன்னணி – பக்காத்தான் இடையில்தான் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு அரசியல் சூழல்களின்படியும் – அரசியல் பார்வையாளர்களின் கருத்துப் படியும் – பொதுத் தேர்தலில் மிக மோசமாக பாதிக்கப்படப் போவது பெர்சாத்து கட்சியும், பெஜூவாங் கட்சியும்தான்!

பாஸ்-அம்னோ இடையில் சுமார் 27 தொகுதிகளில் நேரடி மோதல்கள் நிகழ வாய்ப்புண்டு.

மலாய்க்காரர் அல்லாத வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும்

பெரும்பான்மை மலாய் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் நடைபெறப் போகும் மோதல்களில் அங்கிருக்கும் சொற்ப அல்லது கணிசமான மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றனர்.

உதாரணமாக, கிளந்தான் மாநிலத்தை எடுத்துக் கொள்வோம். இந்த மாநிலத்தில் உள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2018-இல் 9 தொகுதிகளை பாஸ் கைப்பற்றியது. எஞ்சிய 5 தொகுதிகளில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது.

ஆனால், இந்த முறை கிளந்தான் மாநிலத்தில் துன் மகாதீரின் கட்சி சில நூறு மலாய் வாக்குகளையாவது பிரிக்கக் கூடும்.

4 முனைப் போட்டி நிலவும் பட்சத்தில் மலாய்க்காரர் அல்லாத வாக்குகள் பெரும்பாலும் பக்காத்தானுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.

கிளந்தானில் உள்ள கோத்தாபாரு நாடாளுமன்றத் தொகுதியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அங்கு 2018 கணக்குப்படி, 14 விழுக்காடு சீன வாக்காளர்களும் 1 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர். பாஸ் கட்சியின் தக்கியூடின் ஹாசான் 5,869 வாக்குகள் பெரும்பான்மையில் மும்முனைப் போட்டியில் 2018-இல் கோத்தாபாருவில் வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்து இரண்டாவது நிலையில் அதிக வாக்குகளை அமானா கட்சியின் ஹூசாம் மூசா பெற்றார். துன் மகாதீரின் பெஜூவாங் கட்சியும் இந்த முறை இங்கு போட்டியிட்டால் சில நூறு வாக்குகளை – வேட்பாளரைப் பொறுத்து – அது பெறக் கூடும். அந்த வாக்குகள் மலாய் வாக்குகளாகத்தான் இருக்கும்.

மலாய் வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் பெருவாரியாகத் திரும்பும் என அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், அந்தக் கூட்டணிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் சாஹிட் ஹாமிடி தலைமையேற்றிருப்பது வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை.

எனவே, மலாய் வாக்குகள் பிளவு படும் பட்சத்தில் மாநிலத்தைப் பொறுத்து பெரிக்காத்தான் அல்லது தேசிய முன்னணி பக்கம்தான் அதிகமான மலாய் வாக்குகள் பிரியும். உதாரணமாக கிளந்தான், கெடா, திரெங்கானு மாநிலங்களில் பெரிக்காத்தான்-பாஸ் இணைந்த கூட்டணிக்கு சாதகம் ஏற்படும்.

மற்ற மாநிலங்களிலோ மலாய் வாக்குகளில் பெரும்பான்மையானவற்றை அம்னோ-தேசிய முன்னணி பெறும்.

மலாய்க்காரர் அல்லாத வாக்குகள் கணிசமாக இருக்கும் தொகுதிகளில் பக்காத்தானின் வெற்றி வாய்ப்புகளே அதிகரிக்கும்.

பக்காத்தானின் இன்னொரு பலம் – மூடா கட்சி

சைட் சாதிக் தலைமையிலான மூடா கட்சி பக்காத்தானுடன் தொகுதி உடன்பாடு கண்டிருப்பதும் அந்தக் கூட்டணியின் இன்னொரு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த முறை 18 வயது வாக்காளர்களும் வாக்களிப்பில் இணையப் போகின்றனர். அவர்களிடையே மூடா கட்சிக்கு நல்ல ஆதரவு இருக்கிறது.

பிகேஆர் கட்சியின் ரபிசி ரம்லி, நூருல் இசா ஆகியோருக்கும் இளையோரின் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது.

மூடா பக்காத்தானில் இணைந்திருப்பது, அந்தக் கூட்டணியின் அரசியல் வலிமையை அதிகரித்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஆக, பெரும்பான்மை மலாய் வாக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் – அந்த மலாய் வாக்குகள் பிளவுபடும் பட்சத்தில் – மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவு, மூடா கட்சியின் ஆதரவு ஆகிய அம்சங்களின் அடிப்படையில், அந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்புகள் பக்காத்தானுக்கே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்